Last Updated : 29 Jan, 2015 10:39 AM

 

Published : 29 Jan 2015 10:39 AM
Last Updated : 29 Jan 2015 10:39 AM

நோயாளியை செல்போனில் தினமும் தொடர்பு கொண்டு விசாரிக்க வேண்டும்: பன்றிக் காய்ச்சலை சாதாரணமாக நினைக்கக் கூடாது - மருத்துவர்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவு

பன்றிக் காய்ச்சலை சாதாரணமாக நினைக்கக் கூடாது. காய்ச்சலால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களின் தொலைபேசி எண்களை, வாங்கிக் கொண்டு தினமும் காய்ச்சல் பற்றிய தகவல்களைப் பெற வேண்டும் என மருத்துவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹைதராபாத் சென்றுவிட்டு வந்த சென்னை மண்ணடியை சேர்ந்த ரயில்வே ஊழியர் சீனிவாசன் (53) பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். சென்னை தனியார் மருத்துவமனைகளில் 3 பெண்கள் பன்றிக் காய்ச்சல் பாதிப் புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் சங்கீதா தம்பதியின் 2 வயது குழந்தை கோகு லுக்கு திருப்பதி சென்று வந்ததி லிருந்து பன்றிக் காய்ச்சல் வந்தது.

அண்டை மாநிலங்களில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருந்தால், மாநில எல்லைப் பகுதிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரக் குழுக்கள் அமைக்கப்படும். பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உள்ள மாநிலங்களில் இருந்து வருபவர்களை சுகாதாரக் குழுவினர் பரிசோதனை செய்வார்கள். ஆனால், இந்த முறை அதுபோன்ற தடுப்பு நடவடிக்கைகள் எதையும் தமிழக சுகாதாரத்துறை எடுக்கவில்லை.

இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் கே.குழந்தைசாமி கூறியதாவது: பன்றிக் காய்ச்சலுக்கு தேவையான டாமி புளூ மாத்திரை கள் போதுமான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. அதனால் பன்றிக் காய்ச்சலால் யாரும் பயப் பட வேண்டாம். அரசு மருத்துவமனை களில் போதிய சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மருத்துவர்களுக்கு அறிவுரை

பன்றிக் காய்ச்சல் உள்ள ஒருவரிடம் இருந்து தும்மல் மற்றும் இருமலின் போது மற்றவர்களுக்கு அந்நோய் பரவும். அதனால் தும்மும் போது, இருமும் போது கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும். அடிக்கடி சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவ வேண்டும். சளி, இருமல், தொண்டை வலி இருந் தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

மருத்துவரின் சீட்டு இல் லாமல், சுயமாக மருந்துக் கடைகளில் சென்று மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிடக்கூடாது. அதேபோல மருத்துவர்களும் பன்றிக் காய்ச்சலை சாதாரணமாக நினைக்கக் கூடாது. எடுத்த உடனே நோயாளிகளுக்கு ஊசியை போடக்கூடாது. மாத்திரையில்தான் காய்ச்சலை குணப்படுத்த வேண்டும். காய்ச்சல் அதிகமாக இருப்பவரின் செல்போன் எண்ணை டாக்டர்கள் வாங்கிக் கொள்ள வேண்டும். நோயாளியை தினமும் ஒருமுறையாவது தொடர்பு கொண்டு காய்ச்சல் விவரத்தை அறிந்துகொள்ள வேண்டும். நோயாளிக்கு காய்ச்சல் குணமாகும் வரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x