Published : 23 Jan 2015 03:32 PM
Last Updated : 23 Jan 2015 03:32 PM

நியூட்ரினோ ஆய்வுமைய பணி ஏப்ரலில் தொடக்கம்: மூத்த விஞ்ஞானி இந்துமதி தகவல்

நியூட்ரினோ ஆய்வு மையப் பணி வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என இத்திட்டத்தின் மூத்த விஞ்ஞானி பேராசிரியர் டி.இந்துமதி தெரிவித்தார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், நியூட்ரினோ ஆய்வு பற்றிய அறிவியல் கருத்தரங்கு திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கில் நியூட்ரினோ திட்ட மூத்த விஞ்ஞானியும், சென்னை கணித அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியருமான இந்துமதி பேசினார்.

அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

சாதாரணமாக 10 அடி, 8 அடி அடித்தளம் தோண்டி கட்டப்படும் வீட்டில் ஒரு குடிநீர் குழாய் அமைப்பதற்காக சுவரைக் குடைவதால் அந்த வீடு இடிந்து விழாது. அதுபோலவே தேனி அருகே பொட்டிபுரம் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம், அமைக்கப்படுகிறது. தரைத்தளத்தில் சமதளப் பரப்பில், இந்த மலையின் உச்சியில் இருந்து 1 கி.மீ. ஆழத்தில் மலையைக் குடைத்து 2 கி.மீ. தூரம் சுரங்கப்பாதை அமைத்து அதில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படுகிறது.

இந்த மலையில் கடினமான பாறைகள் கிரானைட் கற்களாக அமைந்துள்ளன. அதனால், இப்பாறைகள் 90 முதல் 95 சதவீதம் வரை துண்டுகளாக உடைக்கப் படும். 5 சதவீதம் வெளியாகும் பாறை துகள்கள், காற்றில் பரவாமல் பாது காப்பாக வெளியேற்றப்படும். பாறைகள் வெடிமருந்து வைத்து ஒரு நாளைக்கு இருமுறை சில விநாடிகள் மட்டுமே உடைக்கப்படும். அப்போது ஏற்படும் சாதாரண அதிர்வு 2 கி.மீ. தூரத்துக்கு சில விநாடிகள் மட்டுமே நீடிக்கும். அதனால் கட்டிடங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

ஆய்வு மையம் அமைப்பதற்காக அப்பகுதியில் ஒரு மரம் கூட வெட்டப்போவதில்லை. வனப் பகுதி ஆக்கிரமிக்கப்படுவதில்லை. இந்த ஆய்வு மையம் அமைவதால் சுற்றுச்சூழல், விவசாயம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. இந்த ஆய்வு மையம், எதிர்கால சந்ததியினருக்கு ஒரு வரப்பிரசாதம். ஒரு ஆராய்ச்சியை மேற்கொள்ளும்போது அதை புரிந்து கொண்டால் மட்டுமே அவற்றின் பயனை அறிய முடியும்.

ஒரு குழந்தையை வளர்ப்பது போல் நியூட்ரினோ ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. வளர்த்து பெரியவனான பின் அந்த குழந்தை ஒரு குடும்பம், நாட்டின் வளர்ச்சிக்கு எப்படி உதவுமோ, அதுபோல், தற்போது நடக்கவுள்ள இந்த நியூட்ரினோ ஆய்வு பல்வேறு துறைகள் வளர்ச்சி, பயன்பாட்டுக்கு உதவும்.

நியூட்ரினோ என்பது எலக்ட்ரான் போல் ஒரு அடிப்படை துகள். நியூட்ரினோவுக்கு நிறையில்லை என கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வரை நம்பப்பட்டது. தற்போது அதன் நிறையை கண்டுபிடிக்கவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

சூரியன் அமைந்துள்ள வளிமண்டலத்தில் இருந்து பூமியில் ஊடுருவும் நியூ எலக்ட்ரான், நியூ மியூ, நியூ டவ் ஆகிய மூன்று வகையான நியூட்ரான் துகள்கள் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த துகள்களை ஈர்க்க 17 ஆயிரம் டன் எடையுள்ள மூன்று காந்தமயமாக்கப்பட்ட இரும்புப் பாலங்களைக் கொண்ட உணர்கருவிகள் அமைக்கப்படுகிறது. இக்கருவிகளால் நியூட்ரினோ துகள்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும். நியூட்ரினோ ஆய்வகம் கட்டும் பணி இரண்டு கட்டமாக ரூ.1,500 கோடி மதிப்பில் 10 ஆண்டுகள் நடைபெறும். நியூட்ரினோ ஆய்வு மையப் பணிகள் ஏப்ரல் மாதம் தொடங்கப்படும். ஆய்வு முடியும்பட்சத்தில் சர்வதேச அளவில் இந்தியா பேசப்படும். கேரளாவில் பருவ மழை அதிகமாகப் பெய்வதால் இத்திட் டம் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது என்றார்.

அப்போது தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் எஸ்.ரவீந்திரன், செயலாளர் எம்.வீரையா ஆகியோர் உடனிருந்தனர்.

ஜி.டி.என். கல்லூரியில் நடைபெற்ற நியூட்ரினோ கருத்தரங்கில் மாணவ, மாணவியரிடம் பேசினார் விஞ்ஞானி டி.இந்துமதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x