

தமிழக அரசின் 41-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நாளை தொடங்கவுள்ளது. இப்பொருட்காட்சியில், அரசுத் துறை கண்காட்சி அரங்குகளில் முதல்வர் படத்துக்குப் பதிலாக தமிழக அரசின் கோபுரம் சின்னம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, 41-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை, 29-ம் தேதி தொடங்க அரசு முடிவு செய்திருந்தது. ஆனால், கண்காட்சிக்கான கடைகளை அமைப்பவர்கள் வருவதற்கு தாமதமானதாலும், போக்குவரத் துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடங் கியதாலும், பொருட்காட்சி திறப்புத் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் நாளை (ஜன. 3) சுற்றுலா பொருட்காட்சி தொடங் கப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
41-வது சுற்றுலா தொழில் பொருட்காட்சிக்கான அரங்கு அமைக்கும் பணிகள் ஸ்பெல் பவுண்ட் என்ற தனியார் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப் பட்டுள்ளது.
இங்கு, 120 சிறிய கடைகள், 50 பெரிய கடைகள், இயற்கைச் செடிகள், பூக்கள் சார்ந்த ஸ்டால்கள், மேஜிக் அரங்குகள், பறவைகள் கண்காட்சி, சிறுவர் கள், பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு களில் 30 வகைகள் ஒரு புறத்திலும், மற்றொரு புறம் மத்திய, மாநில அரசுகள் சார்ந்த 50 கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்படுகின்றன.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொருட்காட்சியை நாளை மாலை 5.30 மணிக்கு தமிழக சமூகநலம் மற்றும் சத்துணவுத் துறை அமைச்சர் வளர்மதி திறந்து வைக்கிறார். அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் கோகுல இந்திரா ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக அரசுத் துறை அரங்குகளின் முகப்பின் மேல் பகுதியில், ஜெயலலிதா படம் இடம்பெற்றிருந்தது.
தற்போது முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் உள்ள நிலையில், அரசுத்துறை அரங்குகளின் முகப்பில் முதல்வர் படத்துக்கு பதிலாக, தமிழக அரசின் கோபுரம் சின்னம், சுற்றுலாத் துறையின் குடை சின்னம் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒரு சில அரங்குகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான கண்காட்சியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படமும் இடம்பெறும் என்று அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.