

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையைக் கண்டித்து சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
டெல்லியில் நாளை நடக்கும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்துகொள்கிறார். அவரது இந்திய வருகையை கண்டித்து நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தின.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பவன் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), எஸ்.யு.சி.ஐ. (கம்யூனிஸ்ட்) ஆகிய கட்சிகள் இணைந்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தின.
இதில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ அ.சவுந்தரராஜன், ‘‘இந்தியாவுக்கு ஒபாமா வருவதை பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. ஆனால், இது இந்திய மக்களின் நலனை காவு கொடுக்கும் செயலுக்கு வித்திடுவதாகும். கனிம வளம், மருத்துவம், ராணுவம் உள்ளிட்ட பல துறைகள் பற்றி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளன. அமெரிக்காவின் முக்கிய பங்காளி இந்தியா என்று ஒபாமா கூறியிருப்பதன் மூலம், அமெரிக்க நடத்தி வரும் ஆக்கிரமிப்புகளுக்கு இந்தியாவும் ஆதரவளிக்கும் நிலை உருவாகியுள்ளது’’ என்றார்.
மார்க்சிஸ்ட் எம்எல்ஏ க.பீம்ராவ், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் மு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மாநிலச் செயலாளர் பாலசுந்தரம், எஸ்.யு.சி.ஐ. (கம்யூனிஸ்ட்) கட்சியின் மாநிலச் செயலாளர் ஏ.ரங்கசாமி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.