

டெங்கு காய்ச்சலால் 18 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் ஒரே நாளில் 12 போலி டாக்டர்களை போலீஸார் கைது செய்தனர்.
ராஜபாளையத்தில் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலன் இன்றி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து மருத்துவத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ராஜபாளையம் பகுதியில் ஏராளமான போலி டாக்டர்கள் உள்ளனர்.
அவர்களைக் கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர்களிடமும், போலீஸாரிடமும் தெரிவிக்கப்பட்டது என்றனர்.
அதன்பேரில், விருதுநகர் மாவட்டத்தில் போலி டாக்டர்களைக் கண்டறிய சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுவினர் ராஜபாளையம், சாத்தூர், திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டையில் சோதனை நடத்தினர்.
அப்போது எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ்-2 படித்துவிட்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்ததாக 12 போலி டாக்டர்கள் நேற்று ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.