

பொங்கல் பண்டிகையை ஒட்டி அறிவிக்கப்பட்ட சிறப்பு பஸ் களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. இதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் 20 சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப் பட்டன. முதல் நாளான நேற்று பல்வேறு இடங்களுக்கு 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். ரயில்களுக்கான டிக்கெட் டுகள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தீர்ந்து விடுவ தால் பொதுமக்கள் பலரும் தங்கள் பயணத்துக்கு பஸ்களையே நம்பியுள்ளனர்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 7,250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் சென்னை யில் இருந்து மட்டும் 4,655 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன. முதல் நாளான நேற்று 600 சிறப்பு பஸ்கள் இயக் கப்பட்டன.
பொங்கல் சிறப்பு பஸ்களுக் கான டிக்கெட் முன்பதிவும் நேற்று தொடங்கியது. இதற்காக கூடுதலாக 20 சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டன. மாநகர போக்கு வரத்து கழக நிர்வாக இயக்குநர் ஆல்பர்ட் தினகரன், விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ரங்கராஜன் ஆகியோர் டிக்கெட் முன்பதிவை தொடங்கி வைத்தனர். இதில் பெண்களுக்கு தனியாக 2 கவுன்ட்டர்களும், மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு கவுண்டரும் ஒதுக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் முன்பதிவு கவுன்ட்டர்கள் திறந்து இருக்கும். முதல் நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வமாக டிக்கெட் முன் பதிவு செய்தனர். 300 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் உள்ள ஊர்களுக்கு பயணம் செய்ப வர்கள் ஆன்லைனிலும் டிக்கெட் டுகளை முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3 நடைமேடைகள்
கோயம்பேடு பஸ் நிலையத் தில் உள்ள 1 மற்றும் 2- வது நடை மேடைகளில் முன்பதிவு செய்யப் படாத பஸ்கள் இயக்கப்படு கின்றன. 3, 4, 5 மற்றும் 6 - வது நடைமேடைகளில் முன்பதிவு செய்யப்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 7, 8, 9 ஆகிய மூன்று நடைமேடை களில் இருந்தும் முன்பதிவு செய்யப்படாத விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ்களை நிறுத்தி வைக்க கோயம்பேடு மார்க் கெட் வளாகத்தில் தற்காலிகமாக பணிமனை அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, “கடந்த பொங்கல் பண்டிகைக்கு மொத்தம் 6,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் மொத்தம் 5 லட்சம் பேர் பயணம் செய்தனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.9 கோடி வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டில் மொத்தம் 7,250 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால், கடந்த ஆண்டை விட, கூடுதல் வருமானம் கிடைக்கும் என நம்புகிறோம். மேலும், மக்கள் எவ்வித சிரமம் இன்றி, சொந்த ஊருக்கு சென்று வர போதிய பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
புகார் அளிக்கலாம்
போக்குவரத்து துறை ஆணையரக அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 044 - 24794709 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம்” என்றார்.