Published : 14 Jan 2015 01:40 PM
Last Updated : 14 Jan 2015 01:40 PM

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரம்: அரசியல் கட்சி பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடு- தனி நபர், வழக்குகள் பற்றி பேசத் தடை

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசியல் கட்சித் தலைவர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள், தனிப்பட்ட நபர்களை பற்றியோ அல்லது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றியோ பேசுவதற்கு தடை விதிக்க தேர்தல் துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான கூட்டத்தில் நேரடியாக எச்சரிக்கை செய்யவும், கடிதங்கள் அனுப்பவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் முதல்வர் பதவியையும் எம்எல்ஏ பதவியையும் ஜெயலலிதா இழந்தார். இதையடுத்து, அவர் போட்டியிட்டு வென்ற ரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவரான ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதி என்பதால் ரங்கத்தை நட்சத்திர அந்தஸ்து கொண்ட தொகுதியாக தேர்தல் ஆணையம் கருதுகிறது. எனவே, அங்கு தேர்தல் நடைமுறைகள், பிரச்சாரம் போன்றவற்றை நடத்தை விதிகளின்படி, மிகுந்த கட்டுப்பாடுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் நேற்று நடந்த மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா பங்கேற்றார். அவருக்கு பல்வேறு ஆலோசனைகளை தலைமைத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. சட்டம், ஒழுங்கு, போலி வாக்காளர் புகார் போன்ற பிரச்சினைகளுக்கு இடமின்றி, நூறு சதவீதம் வெளிப்படையான, நியாயமான தேர்தலாக நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ரங்கம் தொகுதியில் வாக்காளர் பட்டியலை மீண்டும் ஒருமுறை சரிபார்க்கவும், கணிணி மென்பொருள் மூலம், புகைப்படங்கள் மற்றும் வாக்காளர் பெயர் விவரங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ளதா எனக் கண்டறியவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள தலைவர்கள். நட்சத்திரப் பேச்சாளர்கள் யார் என்ற பட்டியலை முன்கூட்டியே தருமாறு அரசியல் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். நட்சத்திரப் பேச்சாளர்கள், நடத்தை விதிகளை மீறி தனி நபர்களைப் பற்றி எந்தவிதமான அவதூறு பிரச்சாரமும் மேற்கொள்ளக் கூடாது. அரசியல் கட்சித் தலைவர் களைப் பற்றியோ, நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருக்கும் வழக்குகள் பற்றியோ பேச அனுமதி கிடையாது.

இதுகுறித்து, அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். அப்போது அவர்களுக்குரிய கட்டுப்பாடுகள் குறித்து விளக்கம் அளிப்பதுடன், கட்சித் தலைமைக்கு கடிதமும் அனுப்பப்படும். விதிகளை மீறுவோர் மீது தேர்தல் ஆணைய விதிகளின்படி, வழக்கு பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x