Last Updated : 10 Jan, 2015 11:41 AM

 

Published : 10 Jan 2015 11:41 AM
Last Updated : 10 Jan 2015 11:41 AM

மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை தரம் பிரிக்கும் பள்ளிக்கல்வித் துறை: பெற்றோர், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு

அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பள்ளி மாணவர்களை தரம் பிரித்து அணுகுமாறு, தலைமையாசிரியர்களுக்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயாராக்குவது பற்றி பள்ளிக் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை, புதன்கிழமை அனுப்பப்பட்டுள்ளது. அதில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தனது அனுபவங் களை அடிப்படையாகக் கொண்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதில் அரையாண்டு தேர்வு தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் முதல்நிலை மாணவர்கள், இடை நிலை மாணவர்கள், கடைநிலை மாணவர்கள் என 3 நிலைகளாக பிரிக்க அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் அதில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது:

முதல்நிலை மாணவர்களும் இடைத்தர மாணவர்களும் தொலைக்காட்சிப் பெட்டியின் பக்கமே திரும்பக் கூடாது. அவர்கள் தன்னுடன் பயிலும் நல்ல மாணவர் களுடன் மட்டுமே நட்பு கொள்ள வேண்டும். பிற மாணவர்களிடம் நட்பு கொள்ளக் கூடாது என்று அறிவுரை கூறுங்கள். அரையாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறாத கடைநிலை மாணவர்கள் தன்னைப் பற்றியோ, தன் எதிர்காலத்தைப் பற்றியோ சிறிதும் சிந்தனையில்லாத பரிதாபத்துக்குரிய மாணவர்கள். அவர்களையும் தேர்வில் வெற்றி பெறச் செய்வது நமது நோக்கம்.

காலை 8 மணிக்கு பத்தாம் வகுப்பு மாணவர்களும், குறிப்பிட்ட ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும். மாணவர்கள் வரிசை யாக அமர்ந்து அமைதியாக படிக்க வேண்டும். மாணவர்களை குழுக்களாக பிரித்து முதல்நிலை மாணவர்களை தலைமை வகிக்கச் செய்ய வேண்டும். அதில் இடைத்தர மற்றும் கடைநிலை மாணவர்கள் இருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு மாணவர்கள் 10 நிமிடங்களுக்குள் மதிய உணவு உண்ண வேண்டும். மீதமுள்ள நேரத்தில் பாடவாரியாக தேர்வுகளை எழுத வேண்டும். மாலையில் மறு நாள் மதிய உணவு வேளையில் எழுத வேண்டிய தேர்வுக்காக படிக்க வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் மாணவர்கள் பள்ளியில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் மேற் கூறிய அனைத்து செயல்பாடுகளும் நடைபெற வேண்டும். இதற்கு தலைமையாசிரியர், பத்தாம் வகுப்பு பாட ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் மற்ற ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் கழகமும் ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் ‘நூற்றுக்கு நூறு’ தேர்ச்சி விழுக்காடு பெற முடியும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களின் சமூகப் பின் னணி, வாழ்க்கைச் சூழல் ஆகிய வற்றைப் புரிந்து, அக்கறையுடன், பாகுபாடுகாட்டாமல் அணுக வேண் டிய கல்வித்துறை, தலைமையாசிரி யர்களுக்கு அனுப்பியுள்ள மேற் கண்ட அறிவுரைகள் சமூகப் புரிதலற்ற வகையில் இருக்கிறது. மதிப்பெண் குவிப்பது, 100 சதவீத தேர்ச்சி ஆகியவை மட்டுமே கல்வி யின் நோக்கமா? என்ற கேள்வி யையும் கல்வியாளர்கள் எழுப்பு கின்றனர்.

சமத்துவத்தை போதிக்க வேண் டிய பள்ளிகளில் மாணவர்களை தரம் பிரிக்க பள்ளிக்கல்வித் துறையே அறிவுறுத்துவது கல்வியாளர் களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

இது குறித்து கல்வியாளர் மற்றும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறும் போது, “பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ஒரு கல்வியாளராக இருக்க வேண்டும். வணிக நிறுவனத்தின் தலைவர் போல் நடந்துகொள்ளக் கூடாது. அவர் இந்த சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால், மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்கலாம். பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்கள் பலர் இன்று ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளாக, நீதிபதி களாக பணியாற்றி வருகின்றனர்.

அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறவில்லையா? விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுடன் அதிக மதிப்பெண் பெறும் மாணவர் கள் பேசக் கூடாதா? முதலில் அனைத்து உயர்நிலைப் பள்ளி களிலும் பாடவாரியாக அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 1-ம் தேதி முதல் பணியாற்ற ஆசிரியர்கள் இருக்கிறார்களா? ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கற்றலுக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும். அவர்களுடன் இணைந்து கற்க வேண்டும். 21-ம் நூற்றாண்டின் வளர்ச்சிக்கு ஏற்ப கல்வித் திட்டங்களை வகுக்காமல், மனப்பாட முறையை வலியுறுத்துவது எப்படி நியாயமாகும்?” என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x