Last Updated : 26 Jan, 2015 12:15 PM

 

Published : 26 Jan 2015 12:15 PM
Last Updated : 26 Jan 2015 12:15 PM

தமிழக அரசு சரியாக ஊதியம் தருவதில்லை: அரசு வழக்கறிஞர் பவானி சிங் குற்றச்சாட்டு - ராஜினாமா செய்யவில்லை என மறுப்பு

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜராகும் பவானி சிங் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும், தமிழக அரசு தனக்கு சரியாக ஊதியம் வழங்குவதில்லை என்றும் கூறியுள்ளார். பவானி சிங் ராஜினாமா செய்ததாக `தி இந்து'வில் நேற்று செய்தி வெளியானது. இந்நிலையில், இதுதொடர்பாக `தி இந்து' சார்பில் நேற்று பவானி சிங்கை சந்தித்தோம். அப்போது அவர் அளித்த பேட்டி:

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் பதவியை நீங்கள் ராஜினாமா செய்ததாக செய்தி வெளியாகி உள்ளதே?

அதெல்லாம் சுத்தப் பொய். நான் ராஜினாமா செய்யவில்லை. ஒருவேளை ராஜினாமா செய்தால் ஊடகங்களுக்குதான் முதலில் சொல்வேன். வரும் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல வழக்கில் ஆஜராவேன்.

உண்மையிலேயே நீங்கள் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் ஐஜி குணசீலனிடம் ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லையா?

இல்லை. அவ்வாறு முடிவு எடுத்தால் சென்னையில் இருக்கும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரிடம்தான் ராஜினாமா கடிதத்தைக் கொடுப்பேன்.

நீங்கள் நீதிமன்றத்திலேயே ராஜினாமா கடிதம் எழுதி, அதை குணசீலனிடம் கொடுத்ததாக.. (கேள்வியை முடிக்கும் முன்பே)?

அது வேறு விஷயம். வழக்கு குறித்த சில முக்கியமான குறிப்புகளைதான் அந்த பேப்பரில் எழுதி இருந்தேன்.

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை உங்களுக்கு மிக குறைவான ஊதியம் தருவதாகவும், அதனால் ராஜினாமா முடிவு எடுத்ததாகவும் கூறப்படுகிறதே?

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையைப் பற்றி என்னிடம் பேசாதீர்கள். அவ்வளவு ஆத்திரம் வருகிறது. குறைவான ஊதியம் என்பது பிரச்சினையே இல்லை. ஏற்கெனவே தருவதாக ஒப்புக்கொண்ட ஊதியத்தைக்கூட தர மறுக்கிறார்கள்.

சொத்துக்குவிப்பு வழக்கு சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு மாற்றப்பட்டபோது, அரசு வழக்கறிஞரின் ஊதியம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்கியது. அதாவது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு கர்நாடக அரசும் கர்நாடக உயர் நீதிமன்றத்திலோ, உச்ச நீதிமன்றத்திலோ ஆஜராவதற்கு தமிழக அரசும் ஊதியம் வழங்க வேண்டும்.

இதன்படி, கர்நாடக அரசு எனக்கு தரவேண்டிய தொகையை வழங்கிவிட்டது. ஆனால் தமிழக அரசு சரியாக‌ ஊதியம் வழங்காமல் இழுத்தடித்தது. இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு ஊடகங்களுக்கு பேட்டி அளித்தேன். அதன்பிறகு கொஞ்சம் கொடுத்தார்கள். வழக்கு முடிந்து தீர்ப்பும் வந்துவிட்டது. ஆனால் தமிழக அரசிடமிருந்து வரவேண்டிய தொகை இன்னும் வரவில்லை.

தமிழக அரசிடமிருந்து உங்களுக்கு இன்னும் எவ்வளவு தொகை வரவேண்டும். வழக்கு விவகாரத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை உங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறதா?

அதையெல்லாம் கணக்கு புத்தகத்தை பார்த்துதான் சொல்ல வேண்டும். வழக்கு விவகாரங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை. குணசீலனும், சம்பந்தமும் நீதிமன்றத்துக்கு வந்து போகிறார்களே தவிர எந்த உதவியையும் செய்வதில்லை.

ஆவணங்களை நகல் எடுப்பதற்கு ஒரு உதவியாளரைக்கூட நியமிக்கவில்லை. எனது உதவி வழக்கறிஞ‌ர் முருகேஷ் எஸ். மரடிக்கு நியமன ஆணை வழங்கவில்லை.

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை உதவவில்லை. வழக்கில் உங்களுக்கு உதவ அனுமதிக்க வேண்டும் எனக் கோரும் திமுக வழக்கறிஞர்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளலாமே?

திமுக வழக்கறிஞர்கள் எனக்கு உதவ மாட்டார்கள். பக்கத்தில் உட்கார்ந்துக்கொண்டு தொந்தரவுதான் செய்வார்கள். ஒரு ஜூனியர் வழக்கறிஞருக்குகூட அபராதத்துக்கும் செலவுக்கும் அர்த்தம் தெரியும். ஆனால் திமுக வழக்கறிஞர் சரவணனுக்கு தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x