

சென்னையில் கொடி அணிவகுப்பு நடத்திய துணை ராணுவப் படையினர். (கோப்புப் படம்)
சென்னை: தமிழக தேர்தல் பாதுகாப்பு பணியில் 295 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபட உள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. 3,579 ஆண்கள், 443 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 75,064 ஆக உயர்ந்துள்ளது. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகள் 5,938 உள்ளன.
தேர்தல் பணியில் 3.40 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களில் இதுவரை தபால் வாக்கு செலுத்த 1.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அடுத்தடுத்த கட்டங்களில் நடைபெறும் பயிற்சியின்போது, தபால் வாக்களிக்க தகுதியானவர்களிடம் 12-டி படிவம் வழங்கப்பட்டு, அந்த பயிற்சி மையங்களிலேயே தபால் வாக்குகள் பதிவு செய்யப்படும். பின்னர், மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து திருச்சியில் உள்ள பொது மையத்துக்கு அனுப்பப்படும்.
தமிழகத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட 4 லட்சம் வாக்காளர்கள், 4.63 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 1.20 லட்சம் முதியோர், 70 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 1.90 லட்சம் பேர் 12-டி படிவம் பெற்று, தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களில் 15 ஆயிரம் பேர் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர்.
தேர்தல் பாதுகாப்பு பணியில் 295 துணை ராணுவப் படை கம்பெனிகள் ஈடுபட உள்ளன. இதுவரை 115 கம்பெனிகள் வந்துள்ளன. மற்ற கம்பெனி வீரர்களும் தமிழகத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். பாதுகாப்பு பணிகளில் 1.40 லட்சம் போலீஸார், ஊர்க்காவல் படையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினரும் ஈடுபடுகின்றனர்.
தேர்தல் செலவினங்களுக்காக ரூ.1,032 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 20,757 பேரிடம் அனுமதிபெற்ற துப்பாக்கிகள் உள்ளன. இதில் 3 ஆயிரம் துப்பாக்கிகள் தவிர்த்து மற்ற அனைத்தும் அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தேடப்படும் குற்றவாளிகளில் இதுவரை 2,650 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
வாக்குப்பதிவுக்கு மொத்தம் 75,164 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். 140 தொகுதிகளில் ஒரே ஒரு இயந்திரமும், 89 தொகுதிகளில் 2 இயந்திரங்களும், முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர், விஜய் போட்டியிடும் பெரம்பூர், ஆர்.கே.நகர் ஆகிய 3 தொகுதிகளில் 3 இயந்திரங்களும், கரூரில் மட்டும் அதிகபட்சமாக 5 இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. இது மட்டுமின்றி, அவசரத் தேவைக்காக கூடுத
லாக 20 முதல் 30 சதவீத இயந்திரங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
‘சி-விஜில்’ செயலி மூலம் 3,791 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 727 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவை முன்னிட்டு, ஏப்.21, 22, 23 ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.
ரூ.727 கோடி பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை, நிலைக் கண்காணிப்பு குழுக்கள் நடத்தும் சோதனையில் இதுவரை ரூ.126 கோடி பணம், ரூ.295
கோடி மதிப்பில் தங்கம், வெள்ளி நகைகள், ரூ.75 கோடி போதை பொருட்கள், ரூ.2 கோடி மதுபானங்கள் மற்றும் இலவசமாக வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.227 கோடி மதிப்பிலான பரிசுப் பொருட்கள் என மொத்தம் ரூ.727 கோடி ரொக்கம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில், உரிய ஆவணங்களை சமர்ப்பித்தவர்களிடம் ரூ.381 கோடி மதிப்பிலான பணம், நகை ஆகியவை திருப்பித் தரப்பட்டுள்ளன.
தமிழக அரசின் செய்தித் துறை அதிகாரிகள் முதல்வர் ஸ்டாலினுடன் பாதுகாப்பு வாகனங்களில் சென்று செய்தி அனுப்புவது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்வதை கட்டுப்படுத்த ட்ரோன் கேமரா பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.