

காவிரி உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் நேற்று நடைபெற்றது. பின்னர் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணி யரசன் செய்தியாளர்களிடம் கூறியது:
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டு, ராசிமணல் பகுதிகளில் புதிய அணைகள் கட்ட முயற்சிக்கிறது. இதைக் கண்டித்து தமிழக விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத் தியும், கர்நாடக அரசு தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளவில்லை. மத்திய அரசும் இதைக் கண்டிக்கவில்லை.
புதிய அணைகள் கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 7-ம் தேதி ஒகேனக்கல்லில் இருந்து 40 கிலோமீட்டர் தூரத்துக்கு பேரணியாகச் சென்று, மேகேதாட்டு வில் முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழகம் முழுவதும் ஜன. 25-ம் தேதி முதல் பிப். 28-ம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். பேரணிக்கு தடை விதித்தால், தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்றார்.