Published : 03 Jan 2015 09:18 AM
Last Updated : 03 Jan 2015 09:18 AM

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கேமரா செல்போன் எடுத்துச்செல்ல ரூ.25 கட்டணம்: பார்வையாளர்கள் அதிருப்தி

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் கேமரா செல்போன் எடுத்துச்செல்ல ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பார்வையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு நாள்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் 25 ஆயிரம் முதல் 1 லட்சம் பார்வையாளர்கள் வரை வந்து செல்கின்றனர். நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.30-ம், சிறுவர்களுக்கு ரூ.10-ம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக கேமரா வசதியுள்ள செல்போன்களை உயிரியல் பூங்காவுக்கு எடுத்துச்செல்ல ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் செலுத்தாதது தெரியவந்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் பூங்கா நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதனால் பார்வையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இது குறித்து பார்வையாளர் ஒருவர் கூறியதாவது:

என்னிடம் தனியாக கேமரா இருப்பதால் அதற்கு கட்டணம் செலுத்தியுள்ளேன். கேமரா இருப்பதால், நான் செல்போன் கேமராவை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதனால் எனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பூங்கா அலுவலர்களிடம் கேட்டேன். அவர் கள் அதற்கு மறுத்துவிட்டனர். இது குறித்து மேலும் பேசினால் காவல் துறையிடம் ஒப்படைப்பதாகக் கூறி மிரட்டுகின்றனர்.

உயிரியல் பூங்காவுக்கு வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் கேமரா செல்போன் வைத்திருப்பார் கள். அனைவரும் தனித்தனியாக அதற்கு ரூ.25 செலுத்தவேண்டும் என்று கூறுவது சரியல்ல. எனவே இந்த செல்போன் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். அல்லது கேமராவுக்கு கட்டணம் செலுத்தினால், அவர்களின் கேமரா செல்போனுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்லூரி மாணவர் ஒருவர் இதுபற்றி கூறும்போது, “செல்போனில் கேமரா வசதி இருக்கிறது என்பதற்காக, அது அடிப்படை வசதிகள் மட்டும் உள்ள செல்போனாக இருந்தாலும் கட்டணம் வசூலிக்கிறார்கள். செல்போனை பரிசோதிக்க 3 அலுவலர்களை நியமித்த பூங்கா நிர்வாகம், செல்போனை உள்ளே எடுத்துச் செல்ல விரும்பாதவர்கள் அதை வெளியில் பாதுகாப்பாக வைக்க ஒரு மையத்தை அமைத்திருக்கலாம்” என்றார்.

உயிரியல் பூங்காவில் உள்ள கண்காணிப்பு அலுவலர்களிடம் இதுபற்றி கேட்டபோது, “இதை யெல்லாம் எங்கள் உயரதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியாது. பார்வையாளர்களிடம் அதை நாங்களே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறு கின்றனர். ரூ.25 அதிகமாக செலுத் துவதில் பார்வையாளர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடப் போகிறது” என்றனர்.

கழிவறை செல்ல கூடுதல் கட்டணம்

பூங்காவுக்குள் இருக்கும் கழிவறைகளைப் பயன்படுத்த ரூ.2 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் கட்டண விவரம் பற்றி எழுதப்பட்ட பகுதியை மரப் பலகையால் மறைத்து ரூ.3 முதல் ரூ.5 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக பார்வையாளர்கள் புகார் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x