

பரங்கிமலை கண்டோன்மென்ட் தேர்தலில் நேரிட்ட மோதலில், அதிமுக மற்றும் திமுகவைச் சேர்ந்த 4 பேர் காயமடைந்தனர்.
சென்னை பரங்கிமலை கண் டோன்மெண்ட் தேர்தல் நேற்று நடைபெற்றது. 4-வது வார்டு திமுக வேட்பாளர் கோபிநாத் (50), காலை 8 மணியளவில் பரங்கிமலை பட்ரோடு அம்பேத்கர் நகர் பகுதியில் சென்றபோது, ஒரு கும்பல் அவரை உருட்டுக் கட்டைகளால் தாக்கினர். இதில், அவரது தலை உடைந்தது.
கோபிநாத் தாக்கப்பட்டதை அறிந்து அவரது தம்பி பாலு (46) அங்கு வந்தபோது, அவரையும் அந்தக் கும்பல் தாக்கியது. தாக்குதலில் காயமடைந்த கோபிநாத், பாலு ஆகிய இருவரும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களை, அதிமுகவினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதேபோல, அம்பேத்கர் நகரில் அதிமுக கட்சி அலுவலகத்தில் அமர்ந்து சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு கும்பல் அலுவலகம் மீது கற்களை வீசித் தாக்கினர். இதில், அதிமுகவைச் சேர்ந்த ரங்கநாதன் (57), டில்லிபாபு (63) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் இருவரும் வேறொரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களை, திமுகவினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த மோதல் சம்பவங்கள் தொடர்பாக பரங்கிமலை காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் பரஸ்பரம் புகார் கொடுத்துள்ளனர்.