Published : 27 Jan 2015 11:32 am

Updated : 27 Jan 2015 13:17 pm

 

Published : 27 Jan 2015 11:32 AM
Last Updated : 27 Jan 2015 01:17 PM

மதச்சார்புகளால் பிரிந்திருக்காத வரையில் இந்தியாவின் வெற்றி நீளும்: டெல்லியில் ஒபாமா உரை

மதச்சார்புகளால் பிரிந்து கிடக்க இடம் தராத வரையில், இந்தியாவின் வெற்றி நீண்டிருக்கும் என்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பேசினார்.

இந்தியா - அமெரிக்கா என்ற இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள் இணைந்து செயல்படும்போது, இந்த உலகமே பாதுகாப்பாக இருக்கும் என்று அவர் கூறினார்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அங்கம் வகிக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

'இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கக் கூடிய எதிர்காலம்' (India and America: The Future We Can Build Together) என்ற தலைப்பில் டெல்லி டவுன் ஹாலில் அமெரிக்க அதிபர் ஒபாமா செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.

அவர் பேசும்போது, "நமஸ்தே! (இந்தியில் 'வணக்கம்'). நேற்று குடியரசு தின விழா நிகழ்வுகளைக் கண்டு வியந்தேன். குறிப்பாக பைக் சாகசங்கள் என்னைக் கவர்ந்தன.

இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை பெற்றதில் பெருமிதம் கொள்கிறேன். நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் இந்திய மக்களின் பெருமிதத்தையும், வேறுபட்ட கலாச்சாரத்தையும் கண்டு வியந்தேன்.

என்னை ஈர்த்த இரு பெரிய மாமனிதர்கள் மார்டின் லூதர் கிங், மகாத்மா காந்தி. மார்டின் லூதர் கிங் அமெரிக்கர், மகாத்மா காந்தி இந்தியர். இதன் காரணமாகவே நான் இன்று இங்கு நிற்கிறேன்.

'உலகமே பாதுகாப்பாக இருக்கும்'

இந்திய அரசியல் சாசனமும், அமெரிக்க அரசியல் சாசனமும் 'வீ த பீப்பிள்' என்ற வார்த்தைகளுடனேயே துவங்குகிறது. இந்தியா - அமெரிக்கா என்ற இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள் இணைந்து செயல்படும்போது இந்த உலகமே பாதுகாப்பாக இருக்கும்.

'இந்திய மின் தேவை பூர்த்தியடையும்'

நீண்ட காலமாக இழுபறியில் இருந்துவந்த இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்ததத்துக்கு தீர்வு கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்தியர்களும் மிகவும் தேவைப்படும் மின்சாரம் கிட்டும். எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு காண அமெரிக்கா உதவும்.

'ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா'

இரு நாடுகளுமே பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாதத்தை கூட்டாக நாம் எதிர்கொள்ள வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்; அதில், இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும். (அரங்கத்தில் பலத்த கைதட்டல்).

தடுக்கக்கூடிய நோய்களில் குழந்தைகள் பலியாவதை தடுப்பதில் இந்தியாவும் - அமெரிக்காவும் இணைந்து செயல்படலாம். கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் அதிகமானோர் வறுமையில் இருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளனர்.

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்த அளவு குறிப்பிடத்தக்கது. வளர்ந்த நாடு, வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கரியமில வாயு வெளியீட்டை கட்டுப்படுத்துமாறு கோருவது சரியாகாது. ஆனாலும், நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படாவிட்டால் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி காண முடியாது.

மோடிக்குப் புகழாரம்

தனிநபர் மரியாதைக்கு நாம் மதிப்பளிக்கும்போதே நாம் வலியவர் ஆகிறோம். அமெரிக்கா எனக்கு நிறைய கொடைகள் வழங்கியிருந்தாலும், என் வாழ்வில் நிற பேதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். இழிவாக கருதப்படும் தொழிலை செய்பவர்கள் காணும் கனவுகூட மேன்மையானதே.

அதிர்ஷ்டவசமாக நாம் கனவு காண சுதந்திரம் உள்ள நாடுகளில் பிறந்திருக்கிறோம். அமெரிக்காவில் ஒரு சமையல்காரரின் பேரன் அதிபராக முடியும், இந்தியாவில் ஒரு டீ விற்பவர் பிரதமராக முடியும்(அதிபர் என தன்னையும், பிரதமர் என நரேந்திர மோடியையும் குறிப்பிட்டார்).

பெண்களுக்கு முக்கியத்துவத்தால் வியப்பு

பெண்கள் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நான்சி பெலோசியைப் பாருங்கள். அவர் அமெரிக்காவில் பெண்கள் எத்தகைய உயரத்தை எட்ட முடியும் என்பதை உணர்த்துகிறது. ஒவ்வொரு பெண்ணும் ஓர் ஆணுக்கு சமமாக முக்கியமானவள். இந்திய ராணுவத்தில் பெண்களை பார்த்தபோது மகிழ்ந்தேன். எந்த தேசத்தில் பெண்கள் முன்னேறுகின்றனரோ அந்த தேசம் பெரிய வெற்றியை காணும்.

அமெரிக்க மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில வேண்டும்

அமெரிக்க மாணவர்கள் இந்தியா வந்து கல்வி பயில வேண்டும் என விரும்புகிறேன். தற்போது இந்திய மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் அமெரிக்கா வந்து கல்வி பயில்கின்றனர். அதேபோல் எதிர்காலத்தில் அமெரிக்க மாணவர்கள் இந்தியா வந்து கல்வி பயில வேண்டும். இளைஞர்களுக்கு அதிகாரம் வழங்கும்போது நம் தேசம் வலுப்பெறும்.

மத நல்லிணக்கம் தேவை:

ஒவ்வொரு தனி நபரும் தனக்கு விருப்பமான மதத்தை பின்பற்ற இந்திய அரசியல் சாசனம் வழிவகை செய்கிறது. இந்திய அரசியல் சாசனத்தில் சட்டப் பிரிவு 25 - மதச் சுதந்திரத்தை விரிவாக எடுத்துரைக்கிறது. எனவே தனி நபர் மதச் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். மதச்சார்புகளால் பிரிந்து கிடக்க இடம் தராத வரையில், இந்தியாவின் வெற்றி நீண்டிருக்கும்.

எனவே, ஒரு தனிநபர் தான் விரும்பும் மதத்தை, கொள்கையை பயமின்றி, பாகுபாடின்றி பின்பற்ற உரிமை இருக்கிறது. மத, இன, நிறப் பாகுபாடுகள் நம்மைப் பிரித்தாளாமால் தற்காத்துக் கொள்ள வேண்டும்.

ஷாருக்கான், மேரிகோம், மில்காசிங் இவர்கள் அனைவரது வெற்றியையும் சமமாக கொண்டாட வேண்டும். அவர்கள் மதம், நிறம் சார்ந்த பேதங்கள் கூடாது.

இந்தியா, அமெரிக்கா ஆகிய இருநாட்டு அரசியல் சாசனங்களிலும் மத உரிமை இடம் பெற்றிருக்கிறது. நானும், மிஷெலும் எங்களுக்கு நாட்டம் உள்ள கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுகிறோம். அதுபோல் ஒவ்வொரு தனி நபருக்கும் அவருக்கான மத உரிமை வழங்கப்பட வேண்டும்.

அதேவேளையில், மத நம்பிக்கை என்ற பெயரில் சிலர் வன்முறைகளை, தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விடுவதையும் நாம் கண்டு வருகிறோம்.

இந்தியாவில் கர் வாப்ஸி என்ற பெயரில் சில இந்து அமைப்புகள் சார்பில் மறு மதமாற்ற நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா மதச் சுதந்திரம் பற்றி பேசியுள்ளது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அணு ஆயுதம் இல்லாத உலகு செய்வோம்:

அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்குவதே இந்தியா, அமெரிக்காவின் பொதுவான குறிக்கோளாக இருக்கும்.

எழுச்சிமிகு இந்தியா:

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா அதிக பலத்துடன் எழுச்சி காண வேண்டும் என விரும்புகிறேன். பிராந்தியங்களுக்கு இடையேயான பிரச்சினைகளில் சுமுக தீர்வு எட்டப்பட்டவேண்டும்.

இந்த நூற்றாண்டின் சிறந்த கூட்டாளிகள்

இந்தியாவும் - அமெரிக்காவும் சிறந்த கூட்டாளிகளாக இருக்க முடியும் என நான் நம்புகிறேன். நமது நட்புறவு இந்த நூற்றாண்டின் தலைசிறந்த நட்புறவாக பறைசாற்றப்பட வாய்ப்புள்ளது.

இந்தியாவும் - அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டால் என்னவெல்லாம் சாதிக்கமுடியும் என்பதை உங்களிடம் நேரடியாக எடுத்துரைத்துவிட்டேன்.

இந்தியா - அமெரிக்க மக்களிடையே நிலவும் ஆழமான நட்புறவின் அடிப்படையிலேயே இருநாடுகளுக்கு இடையேயான இந்த புதிய சகாப்தத்தை நோக்கி நான் அடியெடுத்துவைத்துள்ளேன்" என்றார்.

ஒபாமாமோடிஇந்தியாஜனநாயகம்சர்வதேச பாதுகாப்பு

You May Like

More From This Category

More From this Author