

தமாகாவின் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த தமிழகம் முழுவதும் பயணிக்கக் கூடிய விழிப்புணர்வு பேருந்து இன்று புறப்படவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா தலைமை அலுவலகத் தில் குடியரசு தினக் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது:
மத்திய அரசு ஆட்சி அமைத்த நாள் முதலே பல்வேறு மக்கள் விரோத போக்குகளில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை வழங்கப்பட்டு வந்த மானியங்கள் குறைக்கப்படுகின்றன. பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த காஸ் மானியத்தை ரத்து செய்யும் முடிவை பாஜக அரசு கைவிட வேண்டும். மானியம் வழங்கி விவசாயிகளை பயனடையச் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் ஏழை எளிய விவசாய மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கிராமப்புற ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்படுவது கேள்விக்குறியாகி உள்ளது. அவை தொடர்ந்து இயங்கு வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தமாகாவை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். இதையொட்டி கட்சியின் உறுப்பினர் சேர்க் கையை அதிகப்படுத்த தமிழகம் முழுவதும் பயணிக்கும் வகையில் விழிப்புணர்வுப் பேருந்து ஒன்று புறப்படவுள்ளது. இந்த பேருந்து சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலையிலிருந்து நாளை (இன்று) புறப்படவுள்ளது. இது அடுத்த 15 நாட்களில் தமிழகம் முழுவதும் பயணிக்கவுள்ளது.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.