

தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் சன் டிவி ஊழியர்களை காவலில் எடுத்து விசாரிக்கக்கோரிய மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், சிபிஐ தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, அவரது வீட்டில் 323 பி.எஸ்.என்.எல் இணைப்புகள் முறைகேடாக பயன்படுத்தியதாக, வழக்கு போடப்பட்டது.
இந்த வழக்கில் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச்செயலாளர் வி.கவுதமன், சன் டிவி முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரீசியன் எல்.எஸ்.ரவி, ஆகியோர் கைது செய்யப்பட்டு சென்னை முதன்மை சிறப்பு சிபிஐ நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இன்று விசாரணைக்கு வருகிறது
இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க கோரி, சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணமூர்த்தி தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து சிபிஐ தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசார ணைக்கு வருகிறது.