

அமெரிக்காவில் புனித வெள்ளியை முன்னிட்டு நடைபெறும் இசை உற்சவத்தில், கடந்த ஆறு ஆண்டு களாக மானாமதுரை கடத்தை ஒலிக்கச் செய்து அமெரிக்கர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறார் தமிழகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர் முரளி கிருஷ்ணா.
அமெரிக்காவில் போர்ட்லேண்ட் பகுதியில் குடிபெயர்ந்தவர் முரளிகிருஷ்ணா(43). பொறியியல் முனைவர் பட்டம் பெற்ற இவர், அங்குள்ள கணினி சிப் தயாரிக்கும் நிறுவனத்தில் மேலாளராகப் பணி புரிகிறார். இசை மீது ஏற்பட்ட அதீத ஆர்வத்தால், கடம் இசைப் பதில் வல்லமை பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் புனித வெள்ளியை முன்னிட்டு அநேக இடங்களில் மாபெரும் இசை உற்சவம் நடைபெறும். இதில் முரளி கிருஷ்ணா மானாமதுரை கடத்தை வாசித்து வருகிறார். இதிலிருந்து எழும் நாதம் வாசிப்போரையும், நேசிப்போரையும் ஒருசேரப் பிணைத்து விடுவதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து முரளி கிருஷ்ணா கூறியதாவது: “எனது குடும்பமே இசைக் குடும்பம்தான். எனது தந்தை கிருஷ்ணமூர்த்தி கும்பகோணத்தைச் சேர்ந்தவர். தாயார் ராதாகிருஷ்ணா வாய்ப்பாட்டுக் கலைஞர். புதுடெல்லியில் பிறந்து வளர்ந்த நான் ஆரம்பத்தில், குருநாதர் வைத்தியநாதனிடம் மிருதங்கம் கற்றேன். பின்னர் சுபாஷ்சந்திரன் என்பவர் மூலம் கடம் கற்றேன்.
எனது நண்பர்கள் மூலமாக சென்னை, கேரளாவில் இருந்து கடம் வாங்கி சென்று அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளோம். ஆனால், மானாமதுரை கடத்தில் இருந்து எழும் நாதம், மணியோசை போல் ‘கணீர்… கணீர்’ என தனித்துவமாக ஒலிக்கிறது.
அமெரிக்காவில் புனித வெள்ளியை முன்னிட்டு நடக்கும் இசை உற்சவத்தில் நான் கடம் வாசிக்கும்போது, அதில் இருந்து எழும் நாதம் அனைவரையும் ஈர்த்து விடுகிறது. அமெரிக்கர்கள் வியந்து போகிறார்கள். இந்த கடத்தை வாங்குவதற்காகவே, கடந்த ஆறு ஆண்டுகளாக மானாமதுரை வந்து செல்கிறேன்” என்றார்.