பெரம்பலூர் புத்தகக் காட்சி சிறப்புப் பார்வை: பெரம்பலூர் (சு)வாசிக்கிறது

பெரம்பலூர் புத்தகக் காட்சி சிறப்புப் பார்வை: பெரம்பலூர் (சு)வாசிக்கிறது
Updated on
2 min read

சென்னை போன்ற பெருநகரங்களில்கூட புத்தகத் திருவிழாக்கள் அதிர்வுகளை ஏற்படுத்தும்போது, கிராமங்களை அதிகம் உள்ளடக்கிய பெரம்பலூர் பிராந்தியத்தில் கேட்கவே வேண்டாம்! ஊர் கூடித் தேர் இழுக்கும் உற்சவ உற்சாகத்தில் திளைத்திருக்கிறது பெரம்பலூர்.

ஜனவரி 30 முதல் பிப்ரவரி 8 வரையிலான 10 நாட்களில் நடைபெறும் 4-வது பெரம்பலூர் புத்தகத் திருவிழா, இம்மக்களுக்கு உண்மையிலேயே திருவிழாதான். மாவட்ட நிர்வாகத்துடன் புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம், தேசிய புத்தக அறக் கட்டளை ஆகியவை இணைந்து பெரம்பலூர் நகராட்சி திடலில் இந்த புத்தக திருவிழாவை நடத்துகின்றனர்.

4 ஆண்டுகளுக்கு முன்பு தரேஸ் அகமது என்ற இளைஞர் பெரம்ப லூர் ஆட்சியராகப் பதவியேற்ற போது, தனது அதிரடி நடவடிக்கை கள் பலவற்றால் மாவட்டத்தைப் புரட்டிப் போட்டார். அதிரடிகளுக்கு இடையே சில ஆதரவான நடவடிக்கைகளையும் அவர் பரிசீலித்தார். அதில் ஒன்றுதான் புத்தகத் திருவிழா ஏற்பாடு.

ஈரோடு மற்றும் மதுரை புத்தகக் காட்சிகளை முன்மாதிரி யாகப் பின்பற்றி 2012-ல் முதல் புத்தகக் காட்சி தொடங்கியது. முதல் ஆண்டில் ரூ29 லட்சத்துக்குப் புத்தகங்கள் விற்றது அப்போதைக்கு பெரும் சாதனை. 3-ம் ஆண்டு புத்தகத் திருவிழாவில், இது ரூ. 1.09 கோடியாக உயர்ந்தது.

இலக்கிய நட்சத்திரங்கள் தரிசனம்

இந்த முறை 121 அரங்குகளில் 90க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் லட்சக்கணக்கான புத்தகங்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர். ரூ. 1.5 கோடிக்குப் புத்தகங்கள் விற்பனையாகும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் பபாஸி அமைப்பைச் சேர்ந்த முருகன். எண்களை விட எண்ணங்களில் ஏற்படும் மாற்றம்தானே புத்தகத் திருவிழாவின் நோக்கமாக இருக்க வேண்டும். அதற்காக இலக்கிய நட்சத்திரங்களைப் பெரம்பலூர் மக்கள் சந்தித்து கருத்துகளைக் காது குளிரக் கேட்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், நெல்லை கண்ணன், பொன்னீலன், அறிவுமதி, ஜோ.டி.குரூஸ், ச.தமிழ்ச்செல்வன், சுகி.சிவம், சு.வெங்கடேசன், ஆர்.அபிலாஷ், பாரதி கிருஷ்ணகுமார், பாரதி பாஸ்கர், பர்வீன் சுல்தானா, டிராட்ஸ்கி மருது, கு.சிவராமன் ஆகியோர் புத்தகத் திருவிழா மேடைகளை அலங்கரிக்க உள்ளனர். உள்ளூர் படைப் பாளிகளுக்கும் இவர்களின் மத்தியில் இடமுண்டு.

நல்ல யோசனை எந்த திசையிலிருந்து வந்தாலும் செவிமெடுக்கிறார் தரேஸ் அகமது. கடந்த புத்தகத் திருவிழாவில் ’தி இந்து’ சுட்டிக் காட்டியதை மனதில் வைத்திருந்து இம்முறை ஆரோக்கியமற்ற சில துரித உணவுகளை (ஜங்க் ஃபுட்) தவிர்த்துவிட்டு, இந்தப் பகுதியின் பாரம்பரிய சிறுதானியப் பண்டங்களைச் சகாய விலையில் தரும் சிற்றுணவகத்தை அமைக்க உத்தரவிட்டார். சிறுவர்களைப் புத்தக ஆர்வத்திலிருந்து திசை திருப்பும் பொம்மை விற்பனைக்குத் தடை விதிக்கவும் உத்தரவிட்டார்.

புத்தகங்களும் சமூக மாற்றங்களும்

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 326 பெண் குழந்தைகள் பெற்றோரின் திருமண வலையிலிருந்து அதிகாரிகளால் மீட்கப்பட்டிருக்கிறார்கள். மாநிலத்தின் முன்மாதிரியான சூப்பர் 30 திட்டம் வாயிலாக ஏராளமான கிராமப்புற மாணவர்களுக்கும் அரசு தொழிற்கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. கிளை நூலகங்களைத் துணை வட்டாட்சியர்கள் பொறுப்பில் ஒப்படைக்க அவர்கள் போட்டி போட்டிக்கொண்டு கிராமங்களிலும் வாசகர் வட்டத்தை விரிவடையச் செய்தார்கள். பள்ளி கல்லூரிகள் மற்றும் ஊர்ப்புற நூலகங்கள் பரிசளிக்கப்பட்ட புத்தகங்களால் ததும்பி இருக்கின்றன.

முன்னேற்றத்தில் பெரம்பலூர்

கடந்த கல்வியாண்டில் பள்ளிக்கல்வி மேல்நிலைத் தேர்வில் மாநிலத்தில் 4-ம் இடத்துக்கு பெரம்பலூர் முன்னேறியது. இவை எல்லாவற்றுடனும், புத்தகத் திருவிழாவில் ஒரு கிராமப்புறப் பள்ளிச் சிறுவன் தனது உண்டியல் சேமிப்பில் வாங்கிய, தனக்குப் பிடித்த முதல் புத்தகத்தைப் பக்கம் புரட்டி வாசம் நுகர்ந்து எழுத்துக் கூட்டி வாசிக்க முனைவதை முடிச்சுப்போட முடிகிறதா? இப்போது புரியும் பெரு நகரங்களைவிட பெரம்பலூர் போன்ற சிறு நகரங்களில் புத்தக திருவிழாக்களின் அவசியம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in