Published : 29 Jan 2015 09:53 AM
Last Updated : 29 Jan 2015 09:53 AM

கரூர்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் தென்னிலை சுங்கச்சாவடியில் நாளை நள்ளிரவு முதல் கட்டணம் வசூல்

கரூர்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் கரூர் மாவட்டம் தென்னிலை சுங்கச்சாவடியில் கட்டண வசூல் செய்வது நாளை (ஜன. 30-ம் தேதி) நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது.

கரூர்- கோவை தேசிய நெடுஞ் சாலையில் உள்ள இரு வழிச்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அகலப்படுத்தப்பட்டு தரம் உயர்த்தப்பட்டது. இதில் கரூர் மாவட்டம் தென்னிலையில் சமீபத்தில் சுங்கச்சாவடி (உப யோகிப்பாளர் கட்டண மையம்) அமைக்கப்பட்டது. இதில் கட்டணம் வசூலித்துக்கொள்ள ஜன.20-ம் தேதி நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து கரூர்- கோவை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள கரூர் மாவட்டம் தென்னிலை உபயோகிப்பாளர் கட்டண மையத்தில் ஜன.31-ம் தேதி முதல் உபயோகிப்பாளர் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. நாளை (ஜன.30) நள்ளிரவு 12 மணி முதல் கட்டண வசூல் தொடங்குகிறது.

இதனையொட்டி உபயோகிப் பாளர் கட்டண வசூல் மைய கவுன்டர்கள் அமைக்கும் பணிகள் நேற்று தீவிரமாக நடைபெற்றன. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளிடம் ஊழியர்கள் கட்டண விவரம் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.

கார், வேன், ஜீப் ஆகிய வாகனங்களுக்கு ஒரு வழிப் பயணம் செய்ய கட்டணம் ரூ.35, அதே வாகனம் அதே நாளில் திரும்பப் பயணம் செய்ய கட்டணம் ரூ.50. இலகு ரக வர்த்தக வாகனம், இலகு ரக சரக்கு வாகனம் அல்லது மினி பஸ் ஒரு வழிப்பயணம் செய்ய கட்டணம் ரூ.55. அதே வாகனம் அதே நாளில் திரும்பப் பயணம் செய்ய கட்டணம் ரூ.85. பேருந்து அல்லது டிரக்குக்கு ஒரு வழி கட்டணம் ரூ.120, திரும்பப் பயணம் செய்ய கட்டணம் ரூ.175 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வர்த்தகம் அல்லாத பயன் பாட்டுக்கான வாகன பதிவு பெற் றுள்ள, வாகன உரிமையாளர்கள் சுங்கச்சாவடியிலிருந்து 20 கி.மீ. தொலைவுக்குள் வசிப்பவர்களுக்கு மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.225. இக்கட்டண விகிதம் வரும் மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும். தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலைகளில் வசூலிக்கும் கட்டணத்தில் 60 சதவீதம் கட்டணத்தை இருவழிச் சாலைகளில் வசூலிக்கலாம் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதித்துள்ளது. இதனையடுத்து கரூர்- கோவை இரு வழிச்சாலையிலும் கட்டண வசூல் தொடங்குகிறது.

இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணை கரூர் பிரிவு திட்ட இயக்குநர் சுரேந்திரநாத் கூறியபோது, “தென்னிலை உபயோகிப்பாளர் கட்டண மையத்தில் ஜன.25-ம் தேதிக்குப் பிறகு கட்டணம் வசூலிக்க இந்திய தேசிய ஆணையம் ஜன.20-ம் தேதி அனுமதி வழங்கியது. இதையடுத்து ஜன.31-ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x