Last Updated : 26 Jan, 2015 12:24 PM

 

Published : 26 Jan 2015 12:24 PM
Last Updated : 26 Jan 2015 12:24 PM

நினைவுகளை இழந்து சென்னையில் தவித்த சுவிட்சர்லாந்து பெண்ணுக்கு தீவிர சிகிச்சை: தனி விமானத்தில் சொந்த நாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு

நினைவுகளை இழந்து சென்னையில் தவித்த சுவிட்சர்லாந்து நாட்டு பெண்ணுக்கு, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை அழைத்துச் செல்வதற்காக சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து தனி ஆம்புலன்ஸ் விமானம் வருகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வால்டாக்ஸ் சாலையில் கடந்த 16-ம் தேதி பூக்கடை காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் மகிமா ரோந்து சென்றார். அப்போது, ஒரு ஓட்டலில் இருந்து சாலை ஓரத்தில் வீசப்பட்டிருந்த மெத்தையில் வெளிநாட்டு பெண் ஒருவர் கால்மேல் கால் போட்டு படுத்துக்கிடப்பதை பார்த்தார். கொசுக்கள் கடித்து அவரது உடல் முழுக்க சிவந்துபோய் இருந்தது. அவரை மீட்ட உதவி ஆய்வாளர், பாரிமுனையில் உள்ள செயின்ட் ஆண்டனி முதியோர் இல்லத்தில் சேர்த்திருக்கிறார்.

அந்தப் பெண்ணிடம் பேசியபோது, அவர் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து திருவான்மியூரில் உள்ள சுவிட்சர்லாந்து துணை தூதரகத்துக்கு மகிமா தகவல் கொடுத்துள்ளார்.

அனைவருக்கும் இன்சூரன்ஸ்

சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் மருத்துவ உதவி உட்பட அனைத்து தேவைகளுக்கும் அந்த நாட்டு அரசு சார்பில் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மீட்கப்பட்ட இந்தப் பெண்ணுக்கும் `யுரோப் அசிஸ்டன்ஸ் சுவிஸ்' என்ற நிறுவனத்தில் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பெண்ணின் நிலைமை குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், சென்னை சேத்துப்பட்டு பச்சையப்பாஸ் கல்லூரி விடுதி சாலையில் உள்ள பத்மினி நர்ஸிங் ஹோமில் அவரை சேர்க்குமாறு கூறியுள்ளனர். அதன்படி அங்கு சேர்க்கப்பட்ட சுவிட்சர்லாந்து பெண்ணுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அகதிகள் முகாம், முதியோர் இல்லம் போன்ற இடங்களிலும் மருத்துவம் மற்றும் மனநல சிகிச்சைகளை செய்ததன் மூலம் சுவிட்சர்லாந்து நாட்டு இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் பத்மினி மருத்துவமனைக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்பின் மூலம் சுவிட்சர்லாந்து பெண்ணை அந்த மருத்துவமனையில் சேர்க்கும்படி கூறியுள்ளனர்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகே அவர் யார், எப்படி இங்கு வந்தார், அவருக்கு என்ன பிரச்சினை போன்ற அனைத்து விவரங்களும் தெரியவந்தன.

மூளைச் சிதைவு நோய் பாதிப்பு

இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் கவுதம் கூறியதாவது:

பிரெட்ரிக் ஸ்பேச்சர் என்பதுதான் அந்தப் பெண்ணின் பெயர். 61 வயதாகும் இவருக்கு `டிமென்சியா’ என்ற மூளைச் சிதைவு நோய் உள்ளது. இதனால் பல முக்கிய நினைவுகளை இழந்திருக்கிறார். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. பிரெஞ்ச் மொழி மட்டுமே பேசுகிறார்.

5 பேர் கொண்ட குழுவாக மாமல்லபுரத்துக்கு வந்த பிரெட்ரிக், திடீரென ஏற்பட்ட மறதியால் தனது குழுவில் இருந்து விலகி பல்வேறு இடங்களில் சுற்றியிருக்கிறார். ஸ்கேன் பரிசோதனை செய்தபோது சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்ததற்கான தடயங்கள் உள்ளன. இதில் அவரது மூளையின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டு `டிமென்சியா’ ஏற்பட்டுள்ளது. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் பல நினைவுகளை இழந்துவிடுவர். தான் ஏங்கே இருக்கிறோம் என்பதே அவர்களுக்கு தெரியாது.

தந்தையின் நினைவுகளுடன்

பிரெட்ரிக்கிடம் பேசும்போது, `நான் இப்போது ஆப்பிரிக்காவில் இருக்கிறேன். எனது தந்தை எனக்காக வீட்டில் காத்திருக்கிறார். அவரிடம் செல்ல வேண்டும்’ என்று கூறினார். ஆனால் உண்மையில் அவரது தந்தை இறந்து சில ஆண்டுகள் கடந்துவிட்டன. அவர் நிகழ்காலத்தை மறந்து தந்தையுடன் இருந்த நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம்.

இவ்வாறு டாக்டர் கவுதம் கூறினார்.

தனி விமானம் வருகை

திருவான்மியூரில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி முத்து கூறுகையில், "பிரெட்ரிக்கிடம் பாஸ்போர்ட் போன்ற எந்த ஆவணங்களும் இல்லை. இதனால், அவரை சுவிட்சர்லாந்து அனுப்பி வைப்பதற்கான ஆவணங்களை தயார் செய்து வருகிறோம். அவரை அழைத்துச் செல்வதற்காக இன்னும் இரு நாட்களில் `சுவிஸ் ஏர் ஆம்புலன்ஸ்’ என்ற தனி விமானம் வருகிறது. அந்த விமானத்தில் ஒரு டாக்டர் மற்றும் நர்ஸ் வருவார்கள். முழுமையான மருத்துவ உதவியுடன் சுவிட்சர்லாந்து செல்ல இருக்கிறார் பிரெட்ரிக். வெளிநாடுகளில் தவிக்கும் தங்கள் நாட்டவர்களை அழைத்து வருவதற்காகவே `சுவிஸ் ஏர் ஆம்புலன்ஸ்' என்ற தனி விமானத்தை சுவிட்சர்லாந்து வைத்துள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x