Published : 13 Jan 2015 12:15 PM
Last Updated : 13 Jan 2015 12:15 PM

ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அரசு அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும். அதன்மூலம் மாட்டுப்பொங்கல் அன்று பாலமேட்டில் தொடங்கி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகளுடன் தமிழக அரசு அதிகாரிகள் நேற்று நடத்திய பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா? என்ற வினா எழுந்துள்ளது.

தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக 8 மாதங்களாக உறங்கிக் கொண்டிருந்த தமிழக அரசு, இப்போது அதிகாரிகள் குழுவை டெல்லிக்கு அனுப்பி, பழக்கப்பட்ட விலங்குகளை காட்சிப்படுத்துதல் என்ற பிரிவில் இடம்பெற்றிருக்கும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக் கொண்டிருக்கிறது. ஆனால், காலம் கடந்து விட்டதாகக் கூறி தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. இதனால், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் அதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

அதேநேரத்தில் இன்னும் கூட காலம் கடந்து விடவில்லை. கடந்த 2008 ஆம் ஆண்டில் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஒருநாள் முன்பாக 15.01.2008 அன்று தான் உச்ச நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தது. அடுத்த நாளே பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டன.

அதேபோல், இப்போதும் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இப்பிரச்சினையை நேரடியாக தமது பொறுப்பில் எடுத்துக் கொண்டு உடனடியாக பிரதமரை நேரில் சந்தித்து முறையிட வேண்டும்; மற்றொரு புறம் தமிழக அரசின் மறு ஆய்வு மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்து சாதகமான தீர்ப்பை பெற முயல வேண்டும் என்பன உட்பட ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த என்னென்ன வாய்ப்புகள் உள்ளனவோ அவை அனைத்தையும் பயன்படுத்த வேண்டும்.

அதன்மூலம் மாட்டுப்பொங்கல் அன்று பாலமேட்டில் தொடங்கி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x