Published : 16 Jan 2015 03:44 PM
Last Updated : 16 Jan 2015 03:44 PM

ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன: தமிழக அரசு

வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இன்று செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் , ''2015-ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து, சில விதி முறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது. சென்னை, எண்.13, மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸிடவர், மூன்றாம் தளத்திலுள்ள தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலரிடமிருந்து ஹஜ் 2015-ற்கான விண்ணப்பப் படிவங்களை 19-01-2015 முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை www.hajcommittee.com என்ற இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப்படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மனுதாரர்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 20-02-2015.

வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது. 20-02-2015 அன்று அல்லது அதற்கு முன்பு வழங்கப்பட்டு, குறைந்தது 20-03-2016 வரையில் செல்லத்தக்க கணினி வழி பதிவு செய்யக்கூடிய பன்னாட்டு பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்கவேண்டும். IFS குறியீடு உடைய வங்கியிலுள்ள தங்களின் கணக்கு விவரங்களை மனுதாரர்கள் அளிக்கவேண்டும். ஹஜ் 2015 பற்றிய விவரங்களுக்கு ஹஜ் 2015-ற்கான வழிமுறைகளைப் படிக்கவும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் www.hajcommittee.com -ஐ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.300/- (ரூபாய் முன்னூறு மட்டும்)-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியின் இணைப்பு வங்கி திட்டத்தின் மூலம் இந்திய ஹஜ் குழுவின் கணக்கில் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகலை இணைத்து தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவிற்கு 20-02-2015-ற்குள் சமர்ப்பிக்க வேண்டும் '' என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x