

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக வேட்பாளர் எம்.சுப்ரமணியம் உட்பட 5 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிப்.13-ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் எம்.சுப்ரமணியம் அறிவிக்கப்பட்டார். இவர் திண்டுக்கல் சாலை சோழன் நகரில் உள்ள ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான மனோகரனிடம் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேமுதிக மாநில மாணவரணிச் செயலர் விஜயகுமார், மாநகர் மாவட்டத் தலைவர் விஜயராஜன், பாஜக மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
பாஜக சார்பில் மனுத் தாக்கல் செய்தபோது, கட்சித் தலைமை சார்பில் அளிக்கப்படும் அங்கீகாரப் படிவத்தை (ஏ, பி) பூர்த்தி செய்யவில்லை. இந்த படிவத்தை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலேயே அமர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளித்தார்.
ரூ.10 ஆயிரமும் சில்லறையாக…
ஐக்கிய ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவரான ஹேமநாதன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர், டெபாசிட் தொகை ரூ.10 ஆயிரத்தையும் ஒரு ரூபாய் நாணயங்களாகக் கொண்டுவந்து ஸ்ரீரங்கம் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் காதர் மைதீனிடம் அளித்தார்.
இதுவரை 18 பேர் மனு தாக்கல்
ஸ்ரீரங்கத்தில் நேற்று வரை 18 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று முன்தினம் வரை 13 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், பாஜக வேட்பாளர் சுப்ரமணியம், ஐக்கிய ஜனதாதளம் வேட்பாளர் ஹேமநாதன், ஆதித்தனார் மக்கள் கட்சியைச் சேர்ந்த ஜேம்ஸ் பால், சுயேச்சை வேட்பாளர்களாக பெரியசாமி, பாண்டியன் ஆகிய 5 பேர் நேற்று மனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் வேட்புமனு அளித்த ரஜினி ரசிகர் மன்மதன், நேற்று கூடுதலாக ஒரு மனுவை தாக்கல் செய்தார்.