

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் “ரங்கா, கோவிந்தா” என பரவசத்துடன் கோஷமிட்டு நம்பெருமாளை வழிபட்டனர்.
108 வைணவ திவ்ய தேசங் களில் முதன்மையானது, பூலோக வைகுண்டம் என்று அழைக் கப்படும் பெருமையை உடையது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இக்கோயிலில் வீற்றுள்ள அரங்கனுக்கு ஆண்டு முழுவதும் உற்சவங்கள் நடை பெற்று வருகின்றன. இதில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் என்று அழைக்கப்படும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பு வாய்ந்தது.
பகல் பத்து, ராப்பத்து, இயற்பா சாற்றுமறை என 21 நாட்கள் நடைபெறும் இவ்விழா கடந்த டிசம்புர் 21-ம் தேதி திருநெடுந் தாண்டகத்துடன் தொடங்கியது. பகல் பத்து திருநாள்களில் உற்சவரான நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி அர்ச்சுன மண்ட பத்துக்குச் சென்று நாள் முழுவதும் அங்கு பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல் பத்து திருநாளின் கடைசி நாளான நேற்று முன்தினம் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்துடன் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, அர்சசுன மண்டபத்தில் எழுந்தருளினார்.
வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு விழா நேற்று நடந்தது. ராப்பத்து திருவாய்மொழி முதல்நாளான வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் மூலவர் ரங்கநாதருக்கும், உற்சவர் நம்பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து நம்பெருமாள் ரத்தின அங்கி, கிளி மாலை, பாண்டியன் கொண்டை அலங் காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து அதிகாலை 4.02 மணிக்குப் புறப்பட்டு சந்தனு மண்டபம், ராஜமகேந்திரன் திருச்சுற்று, நாழி கேட்டான் வாயிலைக் கடந்து, தங்கக் கொடிமரம் வழியாக பிரதட்சணமாக 2-ம் பிரகாரமான குலசேகரன் திருச்சுற்று வழியாக விரஜாநதி மண்டபத்துக்கு வந்தடைந்தார்.
அங்கு வேத விற்பன்னர்கள் வேத கோஷங்கள் ஓதினர். இதைத் தொடர்ந்து சரியாக அதிகாலை 5 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் “ரங்கா, கோவிந்தா” என பரவசத்துடன் கோஷமிட்டு வழிபட்டனர். பரமபதவாசல் வழியாக வெளியே வந்த நம்பெருமாள் சந்திரபுஷ்கரணி, ராமர் சன்னதி, நடைப்பந்தல் வழியாக 5-ம் பிரகாரம் எனப்படும் திருக் கொட்டகை பகுதிக்கு வந்தார். அங்கு நம்பெருமாளுக்கு சாதரா மரியாதை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்துக்கு எழுந்தருளிய நம்பெருமாளுக்கு அலங்காரம், அமுது செய்யப்பட்டு, காலை 8.30 மணி முதல் பொது மக்கள் சேவைக்கு அனுமதியளிக் கப்பட்டது.
மாலையில் அரையர் சேவை, இரவு 8 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டி, வெள்ளிச் சம்பா அமுது, உபயக்காரர் மரியாதை உள்ளிட்டவை நடைபெற்றது. வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து புறப்பட்டு இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானத்தை சென்றடைந்தார் நம்பெருமாள்.
திருவில்லிபுத்தூரில்..
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்டஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆண்டாள் கோயிலில் அத்யயன உற்சவத்தில் பகல்பத்து உற்சவம் நிறைவடைந்து ராப்பத்து உற்சவம் நேற்று தொடங்கியது. 1-ம் திருநாள் வைகுண்டஏகாதசியை முன்னிட்டு நேற்று காலை 7.40 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது.
பெரியாழ்வார், நம்மாழ்வார், ராமானுஜர், திருமங்கையாழ்வார், வேதாந்ததேசிகர் எதிர்கொண்டு அழைக்க, பரமபதவாசல் வழியே முதலில் வடபத்ரசயனரும் அவரைத் தொடர்ந்து ஆண்டாள், ரெங்கமன்னாரும் வந்தனர். பின்னர் பக்தர்கள் பரமபதவாசல் வழியே வந்தனர்.
பரமபதவாசல் திறப்பு விழாவை யொட்டி நேற்று முன்தினம் மதியம் முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்துக்கு வந்த வண்ணம் இருந்தனர்.