

சென்னை மாநகர காவல்துறையின் ட்விட்டர் பக்கம் சரிவர இயங்காமல் முடங்கியுள்ளது.
'பாலியல் பலாத்காரத்துக்கு பெண்கள் அணியும் ஆடைகள் கவர்ச்சியாக இருப்பதுதான் காரணம் என்று கூறுபவர்கள், வங்கிகள் கொள்ளை போகும் பணத்துக்கும் அதன் மீதான கவர்ச்சியை மட்டுமே காரணம் என்று கருத்து கூறி செல்ல வேண்டும்'
டெல்லியில் உபேர் கால் டாக்ஸியில் பலாத்காரத்துக்கு ஆளான பெண் மீது சிலர் வைத்த குற்றச்சாட்டுக்கு பின்னர் ட்விட்டர் பக்கத்தில் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கூறியது சமூக ஆர்வலரோ அல்லது பெண்ணியவாதியோ அல்ல. இந்தக் கருத்தைக் கூறியது மேற்கு டெல்லியின் துணை காவல்துறை ஆணையர் மதூர் வர்மா. அவரது இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் பாராட்டுக்களையும் மிக பொறுப்பான கருத்தாகவும் வரவேற்கப்பட்டது.
சமூக வலைதளங்கள் அனைத்து தரப்பினரையும் தொடர்பில் வைத்துக்கொள்ள வகை செய்கிறது. குறிப்பாக பொதுமக்கள் நலன் சார்ந்த பணிகளில் இருப்பவர்களின் பங்கு இதில் அதிக அளவில் பேசப்படுகிறது. ஆனால் சென்னை மாநகர காவல்துறையோ இதில் முற்றிலுமாக பின்தங்கியுள்ளது.
குறிப்பாக ட்விட்டர் குறும்பதிவு தளத்தில், சென்னை மாநகர காவல்துறை மிக பின்தங்கிய நிலையிலும் தொடர்புக்கு அப்பாற்பட்டும் இயங்கி அப்டேட் ஆகாமல் உள்ளது. @chennaipolice என்ற முகவரியில் ட்விட்டர் தளத்தில் இயங்கும் இந்த பக்கத்தை தற்போதைய நிலைவரை வெறும் 1,079 பேர் மட்டுமே பின் தொடர்கின்றனர். பயனுள்ள தகவல்கள் எதனையும் பகிராத இந்தப் பக்கம் அதிகாரபூர்வமாகவும் (verified) அங்கீகரிக்கப்படவில்லை.
அதேப் போல, சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையின் (@cctpolice) ட்விட்டர் பக்கமும் சரியான தகவல்களைப் பரிமாறாமல் இயங்கி வருகிறது. இந்தப் பக்கத்தை சுமார் 6,000 பேர் பின்தொடர்கின்றனர். சென்னை காவல் துறையின் வலைதளமான >www.tnpolice.gov.in என்பதில் சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே பொதுமக்கள் தங்களது நிறைகுறைவுகளை பகிரும் களம் தொடங்கப்பட்டது.
ஆனால் அதுவும் தற்போது செயல்படாமல் முடங்கி உள்ளது. சென்னை மாநகர காவல்துறை சமூக வலைதளங்களில் இயங்காத நிலையில் இருப்பது குறித்து மூத்த அதிகாரி கூறும்போது, "காவல் துறையின் இளம் வயது அதிகாரிகள் இதனை செய்ய வேண்டும். ட்விட்டர் கணக்குகள், இணையதளங்கள் போன்றவற்றை பராமரிக்க எங்களுக்கு தனிக் குழு தேவை" என்றார்.
இந்த விஷயத்தில் மற்ற மாநகர காவல்துறை சற்று வேகமாகவே இயங்குகிறது. இதில் குறிப்பாக பெங்களூரு காவல்துறை அதிவேகமாக செயல்படுகிறது என்று கூறலாம். நகரத்தில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான தகவல்களை பெங்களூர் ஆணையர் எம்.என்.ரெட்டி (@CPBlr) அவ்வப்போது பகிர்ந்து பொதுமக்களுடன் தொடர்பில் இயங்குகிறார்.
போக்குவரத்து மாற்றம், குற்ற சம்பவங்கள் குறித்த எச்சரிக்கை போன்ற பயனுள்ள தகவல்கள் பல அதில் தெரிவிக்கப்படுகின்றன. ட்விட்டர் மூலமாக தெரிவிக்கப்படும் புகார்களும் அங்கு பரிசீலிக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறது. இதன் மூலம் மக்களுக்கு காவல்துறையினர் நம்மோடு தான் இருக்கின்றனர் என்ற உணர்வும் ஏற்படுகிறது.
ஃபேஸ்புக்கில் சேவை
ஆனால் ஃபேஸ்புக்கில் இந்த நிலை சற்றே பாராட்டும் விதமாக உள்ளது. சென்னை மாநகர காவல்துறையும் போக்குவரத்து காவல்துறையின் ஃபேஸ்புக் பக்கமும் சுறுசுறுப்பாகவே இயங்குகிறது. அவ்வப்போது ஆன்லைன் மூலமான புகார்கள் கேட்டறியப்பட்டு அது குறித்து விசாரணையும் நடத்தப்படுகிறது. புகார்களுக்கு மூன்று நாட்களில் தீர்வு காணப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதில் பெரும்பாலான புகார்கள் சட்டம் ஒழுங்கு குறித்தே வருவதாகவும், சில இளம் பெண்கள் சமூக வலைதளங்களில் வரும் தொந்தரவுகள் குறித்து தெரிவிக்கவும் செய்கிறார்கள் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இவை அனைத்துக்கும் தக்க வழிமுறைகளும் தீர்வுகளும் வழங்கப்படுகிறது.