

அரசினர் தோட்டத்தில் இருந்து சின்னமலை வரை நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளில் 65 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இந்த வழித்தடத்தில் 2016, ஏப்ரலில் ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் பணி 2007–ல் தொடங்கியது. தற்போது ரூ. 20,000 கோடியில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 24 கி.மீ. தொலைவுக்கு (19 ரயில் நிலையங்கள்) சுரங்கவழிப் பாதையாகவும், 21 கி.மீ. தொலைவுக்கு உயர்நிலை ரயில் பாதைகளும் (13 ரயில் நிலையங்கள்) அமைக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘சென்னையில் மொத்தம் 24 கி.மீ. தொலைவுக்கு சுரங்க ரயில் பாதை மூலம் மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது.
இதற்காக சுரங்க பாதைகள் தோண்டும் பணிகள் 5 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.
முதற்கட்டமாக ஷெனாய் நகர்– திருமங்கலம் இடையே சுமார் 4 கி.மீ. தொலைவுக்கு சுரங்கம் தோண்டும் பணி வெற்றிகரமாக முடிந்துள்ளது. வண்ணாரப்பேட்டை- சென்ட்ரலில் இருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையத்துக்கு மெட்ரோ ரயில்கள் 2017-ல் ஓடும்.
தற்போது, அரசினர் தோட் டத்தில் இருந்து சின்னமலை வரை நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள் 65 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. எனவே, இந்த வழித்தடத்தில் 2016, ஏப்ரலில் ரயில்களை இயக்கத் திட்டமிட் டுளோம்’ என்றனர்.