Published : 26 Jan 2015 01:40 PM
Last Updated : 26 Jan 2015 01:40 PM

சங்கராபுரம் அருகே விஷம் கலந்த மதுவை குடித்த 4 பேர் பலி: பட்டதாரி இளைஞர் மீது போலீஸ் சந்தேகம்

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே விஷம் கலந்த மதுவை குடித்த 4 பேர் பலியாயினர். ஆனால் இறந்த 4 பேருக்கும் இளைஞர் ஒருவர் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

சங்கராபுரம் அருகே உலகஉடையான்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (30). எம்எஸ்சி, எம்பிஃல் படித்த இவர் கள்ளக்குறிச்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டுடோரியல் சென்டர் நடத்தி வந்தார். இதை நடத்த அவர் பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார்.

இதனால் கடனை அடைக்க சொத்தை பிரித்துக்கொடுக்குமாறு தன் பெற்றோரை ராமகிருஷ்ணன் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த பிரச்சினையில் கிராம பஞ்சாயத்தார் தலையிட்டு சமாதானம் செய்து வைத்துள்ளனர். இதன்பின்னர் அவ்வப்போது மனநிலை பாதிக்கப்பட்டவர்போல் ராமகிருஷ்ணன் பேசிவந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் ராமகிருஷ்ணன் புதுச்சேரியில் இருந்து மது வாங்கி வந்திருப்பதாகக் கூறி அதே கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் (42), முனியன் (58), மூர்த்தி (36), கள்ளக்குறிச்சி அருகே வேலாகுறிச்சியைச் சேர்ந்த பஞ்சாட்சரம்(40) ஆகியோரை அழைத்து மது கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதை வாங்கிய 4 பேரும் இரவு நேரத்தில் வயல் பகுதிக்கு சென்று மது அருந்தியுள்ளனர். இதையடுத்து ராமகிருஷ்ணன் அங்கிருந்து தப்பியதாகவும் கூறப்படுகிறது. மது அருந்திய சற்று நேரத்தில் முனியன், மூர்த்தி, பஞ்சாட்சரம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கனகராஜ் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார்.

நேற்று காலை அந்த பக்கம் சென்றவர்கள் கனகராஜை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த சங்கராபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இறந்த 4 பேரும் மது அருந்துவதற்கு முன்பு கோழி இறைச்சி சமைத்துள்ளனர். அந்த இடத்தில் வயல்வெளிக்கு உபயோகப்படுத்தும் பூச்சிகொல்லி மருந்து பாட்டில், ஊசி மற்றும் இறந்த கோழியின் உடலை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். முதலில் கோழிக்கு விஷம் கலந்த மதுவை கொடுத்து சோதித்து பார்த்தபின்பு 4 பேருக்கும் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் இது திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது. இக்கொலைகளை ராமகிருஷ்ணன் செய்தாரா? அல்லது வேறு யாரேனும் கொலை சம்பவத்தை அரங்கேற்றினரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான ராமகிருஷ்ணனை போலீஸார் தேடிவருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x