Published : 20 Jan 2015 09:12 AM
Last Updated : 20 Jan 2015 09:12 AM
கூட்டணிக் கட்சிகள் எந்த முடிவையும் அறிவிக்காததால் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவிக்க முடியாமல் தமிழக பாஜக தடுமாறி வருகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற் கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. திமுக, அதிமுக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.
இடைத்தேர்தலில் போட்டியிட பாஜகவும் விரும்பியது. இதுபற்றி சென்னை வந்திருந்த கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவிடம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சியினரிடம் பேசி, அவர்களின் ஆதரவை திரட்ட தமிழக பாஜக முடிவு செய்தது.
ஏற்கெனவே, கூட்டணியில் இருந்து மதிமுக விலகிவிட்டது. பாமக, தேமுதிக கட்சிகளுக்கும் பாஜகவுடன் இணக்கமற்ற சூழலே நிலவுகிறது. புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை மட்டுமே பாஜகவுடன் நெருக்கமாக உள்ளன. இந்நிலையில், பாமக, தேமுதிக தலைமையுடன் பேசி, ஆதரவு திரட்ட பாஜக நிர்வாகிகள் திட்டமிட்டனர். இதற்காக கடந்த 2 நாட்களாக கூட்டணி கட்சியினரை சந்திக்க பாஜக மாநில தலைமை மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. கூட்டணி கட்சிகளின் முடிவு தெரியாததால் பாஜகவும் தேர் தலில் போட்டியிடுவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. வேட்பாளர் அறிவிப்பும் தாமதமாகி வருகிறது.
இதுதொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் சக்கர வர்த்தியிடம் கேட்டபோது, “கூட் டணிக் கட்சிகளுடன் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இன்று பேச வாய்ப்புள்ளது. அதன்பிறகு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும்” என்றார்.