

திமுக, அதிமுகவுக்கு சுயமரியாதை இல்லை என்று திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் பேசினார்.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து திருப்பூர் சின்னச்சாமியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி அருகே வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தா.பாண்டியன் பேசியது:
1967 முதல் தமிழகத்தை ஆள்பவை திராவிடக் கட்சிகள். 27 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததை மறந்துவிட்டு, அது ஏன் உற்பத்தி இல்லை? இது ஏன் உற்பத்தி இல்லை என கேட்கக்கூடாது. ஜெயலலிதா 13 ஆண்டுகளாக ஆட்சியில் நீடித்து வருகிறார். நீங்கள் சொல்லும் கதைகள் சட்டமன்றத்திற்கு வேண்டுமானால் பொருந்தலாம்.
டெல்லி ஆட்சி ருசி அதிமுக, திமுகவுக்கு தெரிகிறது. தமிழகத்திற்கு இழிவைத் தேடித் தந்ததைத் தவிர, இந்த இரண்டு கட்சிகளும் வேறு எதையும் செய்யவில்லை. இருவருக்கும் சுயமரியாதை இல்லை. 40ல் வெற்றி பெற்றாலும் பிரதமராக முடியாது. ஒரு ரூபாய்க்கு இட்லி, தயிர்சாதம் ரூ.5க்கு போட்டேன் என்று சொல்லலாம். இவையெல்லாம் 2016 சட்டசபை தேர்தலில் வேண்டுமானால் எடுபடும்.
சிறுபான்மையினருக்கு எதிரான போர்ப் பிரகடனமாக இருக்கிறது பாஜக தேர்தல் அறிக்கை என்றார். திருப்பூர் கொங்கு மெயின் சாலையில் வேட்பாளர் கே. சுப்பராயனை ஆதரித்துப் பேசும் தா.பாண்டியன்.