

வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் நீதிபதி குன்ஹாவைக் கண்டித்து கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு மேயர் கார்த்தியாயினி நேற்று நிபந் தனையற்ற மன்னிப்புக் கோரினார்.
வேலூர் மாநகராட்சியின் சாதா ரணக் கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி நடந்தது. அந்தக் கூட்டத்தில், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கிய பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவை கண்டித்து மேயர் கார்த்தியாயினி தீர்மானம் வாசித்தார்.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில் மேயர் கார்த்தி யாயினி மன்னிப்புக் கோரினார். அப்போது, பத்திரிகைகள் வாயிலாக மன்னிப்புக் கோர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நிபந்தனையற்ற மன்னிப்பு
வேலூர் மாநகராட்சி அலுவலகத் துக்கு பத்திரிகையாளர்களை அழைத்த மேயர் கார்த்தியாயினி, நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக அறிவித்தார்.
அதன்பின்னர் அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2014-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வேலுார் மாநகராட்சியில் மாமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு நான் ஒரு வாசகத்தை படித்தேன். அந்த வாசகம் நீதித்துறையையும், குறிப்பாக கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்ற நீதிபதியையும் அவமதிக்கும் வகையில் இருந்தது. மேற்சொன்ன வாசகங்களை வேலுார் மாமன்றக் கூட்டத்தில் படித்ததற்காக வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டு பிரமாணப் பத்திரத்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன்.
இதற்காக, நீதித்துறையிடமும் குறிப்பாக கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்ற நீதிபதியிடமும் என்னுடைய நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.