

ஓராண்டு பி.எட், எம்.எட் படிப்புகளை 2 ஆண்டுகளாக உயர்த்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் மேலாண்மை சங்க செயலாளர் எஸ்.விஜயகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 670 ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் பி.எட்., எம்.எட்., வகுப்புகளை நடத்தி வருகின்றன. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் இவை செயல்படுகின்றன.
தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ), கடந்த டிசம்பர் 1-ம் தேதி புதிய விதிமுறை களையும், ஏற்கெனவே உள்ள விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவந்தும் அறிவித்தது. அந்த விதிமுறைகள் தற்போது செயல்படும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்கும் புதிய கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட விதிமுறைகளை 21 நாட்களுக்குள் நிறைவேற்றுவோம் என உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று என்சிடிஇ தனது இணைய தளம் மூலம் ஆசிரியர் கல்வி நிறு வனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின்படி பி.எட்., எம்.எட்., படிப்புகள் ஓராண்டில் இருந்து 2 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. மாணவர் சேர்க்கை 100-ல் இருந்து 50 ஆக குறைக்கப்படுகிறது. பி.எட்., எம்.எட்., படிப்பு நடத்தும் கல்வி நிறுவனங்கள் இனிமேல், கலை, அறிவியல் பாடங்களையும் சேர்த்து நடத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விதிமுறைகளை அமல்படுத்தினால் ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்கும் அதில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர் களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும். கலை, அறிவியல் கல்லூரிகள், தனியார் கல்லூரி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழும், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள், என்சிடிஇ-ன் கீழும் செயல்படுகின்றன. இந்நிலையில், பி.எட். கல்லூரிகளில் கலை, அறிவியல் பாடங்களையும் சேர்த்து நடத்த இயலாது.
புதிய விதிமுறைகளை 21 நாட்களுக்குள் நிறைவேற்றா விட்டால், ஆசிரியர் கல்வி நிறுவனங் களின் அங்கீகாரம் செல்லாததாகி விடும் என்று கூறுவது, மிரட்டுவது போல இருக்கிறது.
எனவே, புதிய விதிமுறைகளை அமல்படுத்தவும், 21 நாட்களுக் குள் விதிமுறைகளை நிறை வேற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவுக்கும் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, வழக்கறிஞர் ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அதையடுத்து, ‘‘புதிய விதிமுறை களை 21 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று ஆசிரியர் கல்வி நிறுவனங்களை வலியுறுத்த மாட்டோம் என்று என்சிடிஇ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப வேண்டும்’’ என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை மார்ச் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.