

ஒசூரில் தலைமைக் காவலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ராஜஸ்தான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவி உ. வாசுகி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு:
கடந்த அக். 8-ம் தேதி ஒசூர் பஸ் நிலையம் அருகே பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 2 பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகளை கிருஷ்ணகிரி மாவட்ட புறக்காவல் கட்டுப்பாட்டு அறை தலைமைக் காவலர் வடிவேலு தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப் பட்ட பெண்கள் மற்றும் குழந்தை களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வும், வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உயர் நீதிமன்ற முதல் டிவிஷன் பெஞ்ச் அண்மையில் உத்தரவிட்டது.
இந்த நிலையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முதல் டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை நேற்று விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
ஒசூர் சம்பவத்தில் பாதிக்கப் பட்ட பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு நஷ்டஈட்டுத் தொகை இன்று முதல் ஒரு மாதத்துக்குள் வழங்கப்படும் என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இருப்பினும், சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்யும் வரை இந்த வழக்கை நாங்கள் கண்காணிப்போம்.
உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தியது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை பிப். 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.