

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு குறித்து ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். உயர் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை மார்ச் மாதம் 12-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான பணியில் சகாயம் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதுவரை 400 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மதுரையில் 5 கட்ட விசாரணையை முடித்துள்ள நிலையில், மேலும் 2 கட்ட விசாரணை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
கிரானைட் குவாரிகளால் வேளாண்மை, நீர்நிலைகள், வரலாற்று நினைவுச் சின்னங்கள் அழிந்துள்ளது உட்பட பல்வேறு விவரங்களை ஆதாரங்களுடன் அவர் சேகரித்துள்ளார். 15 ஆண்டுகளாக தொடர்ந்து நடை பெற்ற இப்பேரழிவைத் தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை நீதிமன் றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகப் புகார் அளித்தவர்களிடம் சகாயம் உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில், குவாரி பாதிப் புகள்குறித்து மட்டுமே மனுக்கள், தகவல்கள் வந்துள்ளன. எனவே குவாரி அதிபர்களின் கருத்துகளைக் கேட்கும் வகையில், அவர்களிடம் விசாரணை நடத்த சகாயம் தயாராகி வருகிறார். சகாயத்திடம் பல்வேறு தரப்பி னரும் புகார் அளித் திருந்தாலும், முக்கிய குவாரி அதிபர்கள் யாரும் எந்தக் கோரிக்கைக்காகவும் சகாயத் தை இதுவரை சந்திக்கவில்லை. இவர்களை சகாயம் விசாரணைக்கு அழைத்தால், மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.