

பாஜக கூட்டணியில் நீடிப்பது குறித்து பிப்ரவரி 15-ம் தேதி சேலத்தில் நடக்கவுள்ள பொதுக்குழுவில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு, பூரண மதுவிலக்கு கோரியும் மதுரையில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலை நிறுவ இடம் ஒதுக்க வலியுறுத்தியும் கோகுல மக்கள் கட்சி சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. கட்சியின் நிறுவனத் தலைவர் எம்.வி.சேகர் தலைமை வகித்தார்.
உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
கோகுல மக்கள் கட்சியின் முதல் போராட்டமே நல்ல நோக்கத்துக்காக நடத்தப்படுகிறது. பாமக சார்பில் ஆதரவையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். சாதி வாரியாக கணக்கெடுப்பை நடத்தக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறேன். மத்திய அரசில் நாங்கள் அங்கம் வகித்தபோதும் இந்தக் கோரிக்கையை வைத்தோம். எதற்காக இதை மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. 2016 ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்போது இந்தக் கோரிக்கை நிச்சயமாக நிறைவேறும்.
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று 35 ஆண்டுகளாக தனியாக போராடுகிறேன். இப்போது இதற்கு அதிக பலம் சேர்ந்து வருகிறது. தமிழகத்தை மது ஒட்டுமொத்தமாக சீரழித்து வருகிறது. நாட்டிலேயே விபத்து, கொலை, கொள்ளை குற்றங்கள் அதிகம் நடப்பதும் இளம் விதவைகள் அதிகம் இருப்பதும் தமிழகத்தில்தான். இதற்கு மதுதான் காரணம். மதுவை ஒழித்தால் குற்றங்கள் குறையும்.
இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் ஏற்கெனவே சொன்ன பதிலைத்தான் இப்போதும் சொல்கிறேன். யாருக்கும் ஆதரவு இல்லை. தேர்தலில் போட்டியிடவும் இல்லை.
பாஜக கூட்டணியில் பாமக நீடிக்குமா என்பது குறித்து சேலத்தில் பிப்ரவரி 15-ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் முடிவு செய்து அறிவிக்கப்படும். 2016 ல் திமுக, அதிமுக அல்லாத மாற்றுக் கூட்டணி, புதிய கூட்டணி அமைப்போம்.
இவ்வாறு ராமதாஸ் பதிலளித்தார்.
உண்ணாவிரத போராட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உட்பட பலர் உடனிருந்தனர்.