Published : 19 Jan 2015 09:00 AM
Last Updated : 19 Jan 2015 09:00 AM

மிகவும் வெப்பமான ஆண்டைத் தொடர்ந்து...

மிகவும் வெப்பமான ஆண்டு என்று 2014-ம் ஆண்டை நாஸா முதலான அமைப்புகள் வெளியிட்டிருக்கும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இந்தச் சூழலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லிமாவில் நடைபெற்ற பருவ நிலை உச்சி மாநாடு தொடர்பாக மீள்ஆய்வு செய்வதும் இந்த ஆண்டின் இறுதியில் பாரீஸில் நடைபெறவிருக்கும் மாநாட்டுக்கு முன்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்குறித்துப் பரிசீலிப்பதும் அவசியம். ஆனால், இந்தச் செயல்பாடுகளெல்லாம் பேச்சுவார்த்தை அளவிலேயே தேங்கிவிடாமலிருப்பது முக்கியம்.

பருவநிலை மாற்றம் மேலும் மேலும் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சூழலில், ஐ.நா. சபையின் பேச்சுவார்த்தைகளில், இதற்கான நிதியைத் திரட்டுவதிலும், தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்வதிலும் நாடுகளுக்கு இடையே போதுமான அக்கறை வெளிப்பட வில்லை என்பதுதான் உண்மை. பருவநிலை மாற்றம் தொடர்பாக நிதி ஒதுக்குவது என்பது வளரும் நாடுகளிடையே பிரச்சினைக்குரிய ஒன்றாக இருக்கிறது. இதற்கென்று தனியாக நிதி ஒதுக்குவது என்பதை பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ‘பசுமை பருவ நிதியம்’ எனும் நிதியமைப்புக்கு இதுவரை திரட்டப்பட்டிருக்கும் 10 பில்லியன் டாலர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்பதே இப்போதைய கேள்வி.

சீனா, இந்தியா போன்ற பொருளாதாரரீதியாக வளர்ந்துவரும் நாடுகளை, மற்ற வளரும் நாடுகளுக்கு இணையாகக் கருத முடியாது என்றும், கார்பன் அளவைக் குறைப்பதில் இந்த நாடு களுக்கும் சமமான பங்கு இருக்கிறது என்றும் வளர்ந்த நாடுகள் கூறிவருகின்றன. சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்குக் காரணமான நாடு, அதைச் சரிசெய்வதற்காக நிதியளிக்க வேண்டும் என்ற கொள்கை, வளர்ந்த நாடுகள் கொடுக்கும் அழுத்தத்தின் காரணமாக வலுவிழந்துவருகிறது. புவி வெப்பமாதல், பருவநிலை தொடர்பான உரையாடல்களில் வளரும் நாடுகளின் கூக்குரல்கள் எடுபடாமல் போவது துரதிர்ஷ்டமே. சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்குக் காரணமான நாடுகள் மாசுவை வெளிப்படுத்தாத தொழில்நுட்பத்தை உருவாக்கி, ஏழை நாடுகளுக்கு வழங்குவதுதான் நியாயமாக இருக்க முடியும்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இந்தியா, சீனா போன்ற நாடுகளால் கருதப்படுகிறது. பருவநிலை தொடர்பாக அமெரிக்காவுடன் இந்தியா ஏற்கெனவே ஒப்பந்தம் செய்திருக்கிறது. குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வரும்போது, இரு நாடுகளுக்கு இடையே புதுப்பிக்கத் தக்க ஆற்றல் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஆற்றல் செறிவை, 2020-ம் ஆண்டுக்குள் 20% முதல் 25% வரை குறைக்க இந்தியா முன்வந்திருக்கிறது.

புவி வெப்பமாதலின் சராசரி அளவை இரண்டு டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக வைத்திருப்பதற்கான சர்வதேச நாடுகளின் பங்களிப்புகள் போதுமானவையாக இருக்கின்றனவா என்பது பருவநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் மாநாட்டின்போது தெரியவரும். அதற்கு முன்னதாக, சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு வளர்ந்த நாடுகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும், அறிவுசார் சொத்துரிமை என்பதன் பேரில், தொழில்நுட்பங்களின் பரிமாற்றம் தடைபடக் கூடாது என்றும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்திவருவதை வளர்ந்த நாடுகள் காதுகொடுத்துக் கேட்பது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x