Published : 26 Jan 2015 09:50 AM
Last Updated : 26 Jan 2015 09:50 AM

வங்கி கொள்ளையில் ஆந்திர கும்பலுக்கு வலை

கிருஷ்ணகிரி அருகே வங்கியில் 48 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஆந்திர மாநில கும்பலுக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் தமிழகம் மற்றும் ஆந்திர போலீஸார் இணைந்து குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.

கொள்ளை சம்பவம் நடந்த வங்கியில் கோவை மேற்கு மண்டல ஐஜி சங்கர், நேற்று 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். வங்கியின் பின்புறம் தடுப்பு கம்பி துண்டிக்கப்பட்ட இடம், அருகேயுள்ள பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களைப் பார்வையிட்டார். பெட்ரோல் பங்க்கின் கண்காணிப்பு கேமராவில் ஒரு வாரமாக பதிவான காட்சிகளையும், வங்கி கண்காணிப்பு கேமராவில் பதிவான 3 மர்ம நபர்களின் உருவங்களையும் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளை சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மினி லாரி அல்லது சுற்றுலா வாகனத்தைப் பயன்படுத்தியிருக்க வாய்ப்பு உள்ளது. சம்பவம் நடந்த இரவு சந்தேகப்படும் வகையில் அப்பகுதியில் 2 வாகனங்கள் சுற்றிவந்துள்ளன. மேலும், இச்சம்பவத்தில் உள்ளூர் நபர்கள் உதவியுடன் வெளிமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையத்தின் வழியாகச் சென்ற வாகனங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். காஸ் வெல்டிங் மூலம் லாக்கரை வெட்டி எடுத்துள்ளனர். சிறப்பு துப்புறியும் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்தனர்.


காஸ் வெல்டிங் மூலம் வெட்டி எடுக்கப்பட்ட வங்கி லாக்கர்

போலீஸார் சோதனை

இதனிடையே நேற்று மதியம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புத்தூர் டிஎஸ்பி நாகபூஷ்ணராவ் தலைமையில் 4 போலீஸார் வங்கியில் சோதனை மேற்கொண்டனர். வங்கிக் கதவுகளை கொள்ளையர்கள் உடைத்த விதம், லாக்கரை வெல்டிங் மூலம் திறந்த விதம் குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் பார்வையிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x