Published : 25 Jan 2015 11:18 AM
Last Updated : 25 Jan 2015 11:18 AM

தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மறைமலைநகரில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் பலி: நோய் தொற்று ஏற்படுவதைத் தடுக்க மாத்திரை விநியோகம்

செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் இறந்தார். இதையடுத்து, மறைமலைநகர் பகுதியில் பன்றிக் காய்ச்சல் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க சுகாதாரத் துறை மாத்திரைகளை வழங்கி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் உள்ள சேனவரையர் தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி (49). இவருக்கு, ஒரு மகன் மற்றும் மருமகள் உள்ளனர். இந்நிலையில், சரஸ்வதி கடந்த 9-ம் தேதி நுரையீரலில் ஏற்பட்ட நோய் தாக்குதல் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர், போரூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

எனினும், அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அவருக்கு பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதில், அவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு பன்றிக் காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 5 நாட்களுக்கு முன் ஏற்பட்ட சுவாசக் கோளாறு காரணமாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

பன்றிக் காய்ச்சல் பாதிப்பினால் சரஸ்வதி இறந்ததால், மறைமலை நகரில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு, விரைவான இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. நேற்று காலை மின்னணு எரிவாயு தகன மேடையில் உடல் எரியூட்டப்பட்டது. பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கு தலில் பெண் ஒருவர் இறந்தது மறை மலைநகர் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமியிடம் கேட்டபோது: மறைமலைநகர் பகுதி பெண் ஒருவர், பன்றிக் காய்ச்சல் நோய் தாக்குதலில் இறந்ததை தனியார் மருத்துவமனை உறுதி செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

இதுகுறித்து, சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களுக்கு பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்படும். எனவே, சரஸ்வதியின் குடும்ப உறுப்பினர்கள், அருகே உள்ள மற்ற குடியிருப்பு வாசிகள் மற்றும் அப்பகுதி முழுவதும் வசிப்போருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு மாத்திரைகள் (tami flu) வீடு வீடாக வழங்கப்பட்டு வருகின்றன.

சரஸ்வதிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் இந்த மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இந்த பகுதிகளுக்கு சரஸ்வதியோ அல்லது அவரது உறவினர்கள் யாரேனும் சென்று வந்திருந்தாலோ கூட நோய் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x