Published : 18 Jan 2015 11:04 AM
Last Updated : 18 Jan 2015 11:04 AM

சென்னையில் காணும் பொங்கல் உற்சாகம்: மெரினா, கிண்டி, வண்டலூரில் அலைமோதிய கூட்டம்

பொங்கல் விழாவின் கடைசி நாள் கொண்டாட்டமான காணும் பொங்கல் நேற்று கொண்டாடப் பட்டது. சென்னையின் முக்கிய சுற்றுலா தலங்களான மெரினா கடற்கரை, வண்டலூர், கிண்டி பூங்காக்கள், தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சி, புத்தகக் காட்சி உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னைவாசிகள் மட்டு மல்லாது பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களையும் வெகுவாக கவர்ந்து இழுப்பது சென்னை மெரினா கடற்கரை. நேற்று காணும் பொங்கல் என்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மட்டுமின்றி வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்தும் வேன்கள் மூலம் ஏராளமானோர் குடும்பத்தோடு மெரினா கடற்கரைக்கு வந்திருந் தனர். கடற்கரை மணற்பரப்பில் வட்ட வட்டமாக அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவை உறவினர்கள், நண்பர்களுடன் உண்டு களித்தனர். பாதுகாப்பு கருதி, கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்காக கரையில் சவுக்குக் கட்டைகளால் ஆன தடுப்பு வேலி அமைக்கப் பட்டிருந்தது.

மெரினாவில்..

மெரினாவில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்க ஏற் கெனவே தடை இருந்தாலும், பொதுமக்கள் தொடர்ந்து உபயோகிக்கின்றனர். மணல் பகுதியில் வாட்டர் பாக்கெட்கள், பிளாஸ்டிக் கைப் பைகள் ஆகியவை அதிக அளவில் காணப் பட்டன. மெரினாவில் காணும் பொங்கலின்போது வழக்கமாக சுமார் 30 டன் குப்பை சேகரமாகும். இந்த ஆண்டும் அதே அளவு குப்பை சேர வாய்ப்பிருக்கிறது.

குப்பைகளை அகற்ற மெரினாவில் கூடுதலாக 20 பெரிய குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டன. துப்புரவு பணியாளர்களும் கூடுதலாக பணியமர்த்தப்பட்டனர். மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கிண்டி சிறுவர் பூங்காவில்..

கிண்டி சிறுவர் பூங்காவிலும் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்திருந்தவர்கள் தங்கள் உறவினர்கள், நண்பர் களுடன் கிண்டி சிறுவர் பூங்காவையும் அருகே உள்ள பாம்பு பண்ணையையும் பார்வை யிட்டனர். கூட்டத்தை சமாளிக்க அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.

அனுமதிச் சீட்டு பெற, வழக்கமான 2 கவுன்ட்டர் தவிர கூடுதலாக 6 கவுன்ட்டர் அமைக்கப்பட்டிருந்தன. சென்னை மாநகர போலீஸார் 150 பேர், ஊர்க்காவல் படையினர் 25 பேர், ஆயுதப்படையினர் 50 பேர் பூங்கா பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சீருடையில் இல்லாத போலீஸாரும் தொடர்ந்து ரோந்து சுற்றி கண்காணித்தனர்.

பூங்காவின் மையப் பகுதியில் சென்னை மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப் பட்டிருந்தது. மக்களுக்கு முக்கியமான தகவல்களை உடனுக் குடன் தெரிவிக்க ஒலிபெருக்கிகள், உணவு உண்ணுமிடம், ஓய்வறை, கழிப்பறை எங்கு உள்ளன என்று பார்வையாளர்கள் தெரிந்து கொள்ள ஆங்காங்கே தகவல் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் நேற்று காலை கிண்டி சிறுவர் பூங்காவுக்கு வந்து சிறப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்டார்.

வண்டலூரில்..

சென்னையில் காணும் பொங்கல் நாளில் மக்கள் அதிக அளவில் குவியும் இடங்களில் ஒன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. இந்த ஆண்டு 1 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதால் அதற்கேற்ற வசதிகளை பூங்கா நிர்வாகம் செய்திருந்தது. நுழைவுச் சீட்டு வழங்க பூங்காவில் 20 கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் பார்வையாளர்கள் நீண்ட வரிசையில் நிற்காமல், சில நிமிடங்களில் நுழைவுச் சீட்டு களைப் பெற்றுச் சென்றனர்.

மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் காலை 7 மணியில் இருந்தே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 1 மணிக்குள் 36 ஆயிரம் பேர் வந்திருந்தனர். நேரம் ஆகஆக மக்கள் கூட்டம் அதிகரித்ததை அடுத்து, கட்டண அடிப்படையில் ஏற்றிச் செல்லும் சவாரி வாகன சேவை நிறுத்தப்பட்டது. நேற்று மட்டும் 61 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வண்டலூர் பூங்காவுக்கு வந்தனர். பொங்கல் பண்டிகை நாட்களில் மொத்தம் 1.09 லட்சம் பேர் வந்துள்ளனர்.

பொதுவாக, வெளியில் இருந்து உணவுப் பொருட்களை உள்ளே கொண்டுவர வண்டலூர் பூங்காவில் அனுமதி கிடையாது. ஆனால், நேற்று மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. அதே நேரம், உணவுப் பொருட்களை விலங்குகளுக்கு கொடுக்கவோ, அவற்றின் வசிப்பிடங்களுக்குள் வீசி எறியவோ கூடாது என பார்வையாளர்களுக்கு அறிவுறுத் தப்பட்டது. வனத் துறையினர் ஆங்காங்கே நின்று இதை கண்காணித்தபடி இருந்தனர்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் உணவு ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்துத் துறை சார்பில் அம்மா குடிநீர் விற்பனை செய்யப் பட்டது. இதனால் பார்வையாளர்கள் மலிவு விலையில் குடிநீர் வாங்கிக் குடித்தனர். மருத்துவர் குழு மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

போக்குவரத்து நெரிசல்

பார்வையாளர்களால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடாது என்பதால், பூங்காவில் இருந்து 100 மீட்டர் தொலைவு வரை தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. அதன் வழியாக பார்வையாளர்கள் பூங்காவுக்குள் அனுமதிக்கப் பட்டனர். அதில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குழந்தைகளுடன் வந்த தாய்மார்கள் அவதிக்குள்ளாயினர்.

மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் சுமார் 5 கி.மீ. தூரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x