பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் நடந்த கைதி கொலையில் 7 பேர் கைது

பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் நடந்த கைதி கொலையில் 7 பேர் கைது
Updated on
1 min read

பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் போலீஸார் முன்னிலையிலேயே கைதி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும், இந்தக் கொலை தொடர்பாக ஒருவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.

சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வரதன் என்ற வரதராஜ். பூந்தமல்லி அருகேயுள்ள காட்டுப்பாக்கத்தில் 2010-ல் முருகன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.

நெசப்பாக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் அதிமுக பிரமுகர் விஸ்வநாதன் என்ற புல்லட் விஸ்வநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில், வரதராஜ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், முருகன் கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜர்படுத்துவதற்காக, கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்- 2 அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒருங் கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு நேற்று முன்தினம் வரதராஜை போலீஸார் அழைத்து வந்தனர்.

அங்கு, திடீரென ஒரு கும்பல் வரதராஜை போலீஸார் முன்னிலையிலேயே சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டது.மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே வரதராஜ் உயிரிழந்தார்.

இந்தக் கொலை தொடர்பாக புல்லட் விஸ்வநாதனின் உறவினர்களான நெசப்பாக்கம் புருஷோத்தம்மன் (32), யுவராஜ் (29) மற்றும் பழவந்தாங்கல் ராஜேஷ் (26), வியாசர்பாடி பிரபா என்ற பிரபாகரன் (25), தேனாம்பேட்டை ஜெகன் (30), ராமாபுரம் பாஸ்கர் (33), கார்த்திக் (24) ஆகிய 7 பேரை பூந்தமல்லி போலீஸார் நேற்று கைது செய்தனர்.

ஒருவர் சரண்

இந்த நிலையில், கொலை தொடர்பாக ராமாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் (34), செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.

3 போலீஸார் சஸ்பெண்ட்

பூந்தமல்லி நீதிமன்றத்தில் வரதனை ஆஜர்படுத்த வேலூர் மாவட்டம் மேல்பாடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயவடிவேலு, பரதராமி காவல் நிலைய காவலர் பிரகாஷ், வேப்பங்குப்பம் காவல் நிலைய தலைமைக் காவலர் வசந்தகுமார் ஆகியோர் நேற்று முன்தினம் அழைத்துச் சென்றனர்.

துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் பாதுகாப்பில் இருந்த வரதனை, பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜெயவடிவேலு, பிரகாஷ், வசந்தகுமார் உள்ளிட்ட 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இது குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரி கூறும்போது, ‘‘பாதுகாப்புக்குச் சென்ற போலீஸாரிடம் 2 துப்பாக்கிகள் இருந்தன. பாதுகாப்புப் பணியில் மெத்தனமாக இருந்த 3 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில் விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in