Last Updated : 28 Jan, 2015 10:39 AM

 

Published : 28 Jan 2015 10:39 AM
Last Updated : 28 Jan 2015 10:39 AM

சென்னைக்கு அனுப்பப்படும் கெட்டுப்போன மாட்டு இறைச்சி: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

வெளி மாநிலங்களில் இருந்து கெட்டுப்போன மாட்டிறைச்சி சென்னைக்கு அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த சமூக விரோத செயலால் அப்பாவி மக்கள் நோயால் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

வெளி மாநிலங்களில் இருந்து ரயிலில் அனுப்பப்படும் கெட்டுப் போன இறைச்சிகளை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் எப்போதாவது திடீர் சோதனை நடத்தி கண்டுபிடித்து பறிமுதல் செய்து அகற்றுகின்றனர். ஆனால், இதை அனுப்பியது யார்? யாருக்கு அனுப்பினார்கள்? என யாரும் கவலைப்படுவதில்லை.

இது குறித்து விசாரித்தபோது அதிர்ச்சிகரமான பல உண்மைகள் தெரியவந்தன. மாட்டு இறைச்சி வெட்டும் தொழில் செய்யும் ஒருவர், கூறிய அருவருப்பான உண்மை கள்: (அந்த நபரின் பாதுகாப்புக் காக அவரது பெயர் வெளியிடப் படவில்லை)

ஆந்திரம் - சென்னை

ஆந்திர மாநிலம் நெல்லூர், விஜயவாடா ஆகிய பகுதிகளில் இருந்துதான் தமிழகத்துக்கு டன் கணக்கில் மாட்டு இறைச்சி சப்ளை செய்யப்படுகிறது. இதற்கென ஆந்திராவில் சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் மிகப்பெரிய கும்பல் உள்ளது. நோய்வாய்ப்பட்டு இறந்த மாடுகள், விபத்தில் அடிபட்ட மாடு களை இந்த கும்பலைச் சேர்ந்தவர் கள் சேகரித்து ஒரே இடத்துக்கு கொண்டுவருவார்கள். பல விவசாயி களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு நோய்வாய்ப்படும் மாடு களை குறைந்த விலைக்கு வாங்கி யும் வெட்டுவார்கள். மாடுகளை வெட்டி பெரிய பெரிய துண்டுகளாக, தெர்மாக்கோல் ஐஸ் பெட்டியில் அடைத்து, ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வரும் ரயில்களில் அனுப்பிவிடுவார்கள்.

அந்த 4 பேர்

சென்னையைச் சேர்ந்த சகோதரர் கள் 2 பேர், அவர்களின் தொழில் கூட்டாளிகள் 2 பேர் ஆகியோர்தான் சென்னையில் விற்பனை செய் கின்றனர். இவர்கள் 4 பேரிடம் 30-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர். வாரத்துக்கு 2 அல்லது 3 முறை இறைச்சி லோடு வரும். ஆயிரம்விளக்கு மற்றும் சிந்தா திரிப்பேட்டை கூவம் ஆற்றின் அருகே இந்த இறைச்சி பெட்டிகளை கொண்டுவந்து பிரித்து, டன் கணக்கில் குவித்து வைத்திருப்பார்கள். அவற்றை பல வியாபாரிகள் வந்து கிலோ கணக்கில் வாங்கிச் செல்வார்கள்.

இறைச்சியை 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் எடுத்துச் சென்று இறைச்சிக் கடைக்காரர்கள் மற்றும் ஓட்டல்களுக்கு சப்ளை செய்கின்றனர். பின்னர் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி, 400-க் கும் மேற்பட்ட பாஸ்ட் ஃபுட் கடைகளுக்கும் சப்ளை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கடைகளில் ஒரு கிலோ மாட்டு இறைச்சி ரூ.180 முதல் 200 வரையும், ஆடு ரூ.400 முதல் ரூ.450 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இவர்கள் ஆந்திராவில் இருந்து ரூ.30-க்கு மாட்டு இறைச்சியையும், வேறு மாநிலங்களில் இருந்து ரூ.50-க்கு ஆட்டிறைச்சியையும் வாங்குகின் றனர். பின்னர் மாட்டிறைச்சியை ரூ.90-க்கும், ஆட்டிறைச்சியை ரூ.150-க்கும் விற்கின்றனர் என்றார்.

நேர்மையான வியாபாரிகள்

மாட்டு இறைச்சிக் கடை நடத்தி வரும் வியாபாரிகள் சானுல்லா, விஜயகுமார் மற்றும் பலர் கூறியதாவது:

அரசு விதிமுறைப்படி வியாசர் பாடி அருகே ஆட்டுத்தொட்டியில் டாக்டர்களின் மேற்பார்வையில் மாடுகளை வெட்டி, சீல் வைத்து கொண்டு வந்து வியாபாரம் செய்கிறோம். ஆனால், சிலர் அதிக லாபம் சம்பாதிக்க இதுபோன்று செய்கின்றனர். அவர்களால் நேர்மையாக தொழில் நடத்தும் பலர் பாதிக்கப்படுகின்றனர். மக்களை நேரடியாக பாதிக்கும் இதுபோன்ற செயல்களை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்டுகொள்ளாத அதிகாரிகள்

கெட்டுப்போன இறைச்சியை யார் வாங்குகிறார்கள் என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து அவர் கள் மீது நடவடிக்கை எடுப்ப தில்லை. இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “கெட்டுப்போன பொருட்கள் விற்பனை செய்யப் படாமல் தடுப்பது மட்டும்தான் எங்கள் பொறுப்பு. கெட்டுப்போன இறைச்சியை அனுப்பிய மற்றும் சென்னையில் வாங்கும் நபர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது உணவு பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள்தான்” என்றனர்.

உணவு பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, “கெட்டுப்போன பொருட்கள் அனுப்புவதை தடுப்பதற் காக ரயில்வே துறையிலேயே தனிப்பிரிவு உள்ளது. இதை அவர்கள்தான் கவனிக்க வேண்டும்” என்றனர்.

இது குறித்து ரயில்வே சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “பார்சல் சர்வீஸ் மூலம் அனுப்பப்படும் பொருட்கள் கெட்டுப் போனது தெரிந்தால் அவற்றை கைப்பற்றி அழிப்பது மட்டும்தான் எங்கள் பணி” என்று கூறி முடித்துக் கொண்டனர்.

தவறு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார் என்பது மட்டும் கடைசி வரை தெரியவில்லை. பொதுமக்களின் உடல் நலனை பாதிக்கும் இந்த கொடூர சுகாதார கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பது யாரோ?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x