Published : 21 Jan 2015 06:07 PM
Last Updated : 21 Jan 2015 06:07 PM

புத்தக வெளியீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்கும் இ-புக் வாசகர்கள்!

கடந்த 12 நாட்களாக நடைபெற்று வந்த சென்னைப் புத்தகக் காட்சி இன்றுடன் (புதன்கிழமை) நிறைவு பெறுகிறது. இதில் கவனிக்கத்தக்க அம்சம் பற்றிதான் இப்போது பேசப் போகிறோம்.

புத்தக விற்பனை என்பது தற்போது இணையதள புத்தக வெளியீட்டுத் தளங்களை நோக்கி கவனம் மாறியுள்ளது என்பதே அது.

கடந்த சில வருடங்களாகவே இணையதள புத்தக வியாபாரம் குறித்து விழிப்புணர்வு இருந்த போதிலும், நடப்பு ஆண்டுதான் (2015) பெரிய திருப்புமுனையாக அமையும் என நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார்கள்.

மின் புத்தக வெளியீடுகளில் ஆர்வம்

இந்த புத்தகக் காட்சியை முன்னின்று நடத்திவருபவர்களில் ஒருவரும், நியூ ஹாரிசான் மீடியாவின் வெளியீட்டாளரும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் அமைப்பின் (BAPASI) நிர்வாகக் குழு உறுப்பினருமான பத்ரி சேஷாத்ரி கூறுகையில், " முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு நூல் வெளியீட்டாளர்களின் மின் புத்தக (e-books) வெளியீட்டு ஆர்வத்தைப் பார்க்க முடிந்தது. நிறைய இந்திய நூல் வெளியீட்டாளர்கள் பலரும் ஸ்மார்ட் மொபைல் சேவையின் வழியாக வரும் மறைமுக சந்தையின் வழியே வாசகர்களை சென்றடைவதை விரும்புகின்றனர்.

இந்திய புத்தகச் சந்தைக்குள் அமேஸான் நுழையத் தொடங்கிவிட்டது. எனினும், இதில் குறிப்பிடப்படவேண்டியது, அமேஸான் கிண்டெலில் (Amazon Kindle) வாசகர்கள் தமிழ் புத்தகங்களை படிக்க இயலவில்லை. கூகிள் ப்ளே (Googleplay) மற்றும் ஆப்பிள் புக்ஸ் (Apple books) ஆகியவை தமிழ் மின் புத்தகங்களின் விற்பனையில் ஈடுபட்டு வந்தாலும், அதற்கான சரியான திட்டங்கள் இன்னும் பயன்படுத்தப்படவில்லை.

பிளிஃப் கார்ட் (Flip Kart) மின் புத்தகங்களில் தெளிவு இல்லாமல் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. நியூ ஹாரிஸான் மீடியாவின் இ- ரீடர் (E reader) முன்னர் செயல்பாட்டில் இருந்தது. அதை இப்போது மீண்டும் சீர்செய்து வெளியிட இருக்கிறார்கள்.

ஓராண்டுக்குப் பின்னரே வரவேற்பு

ஹிக்கின்பாதம்ஸ் சமீபத்தில் தனது ஹெச்பி இ-ரீடரை நிறுவியுள்ளது. மேலும் பெங்களூரை மையமாக வைத்து இயங்கும் புத்தகக் கடையில் அவர்களது இணைய தள புத்தகங்களின் பட்டியல் அனைத்து இந்திய மொழிகளிலும் இடம்பெறச் செய்துள்ளார்கள். நான் பேசிப் பார்த்த வரையில் ஒரு ஆண்டுக்குப் பின் அவர்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றதாகத் தோன்றுகிறது. அது தர்க்க ரீதியாக தோன்றினாலும்கூட, இணைய தள வெளியீட்டில் ஒரு படி முன்னேற்றம் என்பது தமிழ் வெளியீட்டுச் சூழலில் அவ்வளவு எளிதானதல்ல.

பெருமைக்கு புத்தகம் வெளியிடுவோர்

இந்த புத்தகக் காட்சியில் பங்கேற்ற 600க்கும் மேற்பட்ட வெளியீட்டாளர்களில் 300 வரைக்குமான புத்தக வெளியீட்டாளர்கள் இந்த வியாபாரத்தை சிக்கனமாகவே நடத்துகின்றனர் என்றுதான் சொல்லவேண்டும். அவர்களில் சிலர் கூடுதல் வருவாய்க்காகவும், பெருமைக்காகவும் வெளியீட்டாளர்களாக இருக்கிறார்கள்" என்று பத்ரி சேஷாத்ரி கூறினார்.

பப்சப் (PubSub) இணைய நூலகம்

புத்தகக் காட்சியில் அமைந்திருந்த பப்சப் (PubSub) எனப்படும் ஒரு அரங்கில் ஒரு சாத்தியமான தீர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. இணையதள நூலகத் தளம் (www.pubsub.in) ஒன்றை நிறுவி அதன்மூலம் புத்தகங்களை மேகக் கணிமை (cloud computing) தொழில்நுட்பத்தில் வழங்குகின்றனர். தினம் ரூ.10 அல்லது மாதம் ரூ.300 என இதற்கொரு சந்தாத் தொகையை வாசகர்கள் செலுத்தி அவர்கள் தங்கள் இணையதள சேவையின் வழியே வழங்கும் புத்தகங்களை வாசிக்கலாம். இந்த வருமானத்தை பப்செப் உரிய புத்தக வெளியீட்டாளர்களுடன் பகிர்ந்துகொள்ளும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x