Published : 17 Jan 2015 07:48 PM
Last Updated : 17 Jan 2015 07:48 PM

பெருமாள் முருகனின் எழுத்துப் பணியை முடக்கியதற்கு தி இந்து இலக்கிய விழாவில் கண்டனம்

நாவலாசிரியர் பெருமாள் முருகனுக்கு ஆதரவு தெரிவித்து தி இந்து லிட் ஃபார் லைஃப் 2015 இலக்கியவிழாவில் பெருமாள் முருகனின் எழுத்துப்பணியை முடக்கியதற்காக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த இயற்றப்பட்ட தீர்மான விவரம் வருமாறு:

நாம் ஒரு சமுதாயமாக எழுத்தாளர்கள், வாசகர்கள், நூல் வெளியீட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் கலாச்சார செயல்பாட்டாளர்கள் ஆகிய அனைவரும் இணைந்து சென்னையில் நடைபெறும் தி இந்துவின் இந்த லிட் பார் லைப் 2015 இலக்கியவிழாவில், சிறந்த தமிழ் எழுத்தாளரான பெருமாள் முருகனுக்கு ஆதரவாக அவரது எழுத்தை முடக்கியதற்கு நமது கண்டனைத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்துத்துவா அடிப்படைவாதிகள், சாதிய அமைப்புகள், மற்றும் சில நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுயநலக் கும்பல்கள் 2010ல் வெளிவந்த அவரது வரலாற்று நாவலான மாதொருபாகன் பற்றிய தவறான பிரச்சாரங்களை பரப்பிவருவதாக குற்றம்சாட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த இலக்கிய விழா, பெருமாள் முருகனின் அரசியல் சாசன உரிமைகளைக் காக்கத் தவறியதற்காக உள்ளுர் நிர்வாகத்தின் மீதும் எழுத்தாளர் பெருமாள் முருகனை மிரட்டல் பிரச்சாரம் மற்றும் வன்முறை அச்சுறுத்தல் வழியாக வற்புறுத்தி இனி பெருமாள் முருகன் எழுதவேகூடாது என ஒரு ஒப்பந்தம்போட்டு அதில் கையெழுத்து வாங்கியவர்கள் மீதும் இச்செயலுக்கு உடந்தையாக செயல் பட்டவர்கள் மீதும் கடுமையான எதிர்ப்பை இங்கு பதிவு செய்கிறது.

ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் மூலமோ, வன்முறை மூலமோ கருத்துச்சுதந்திரத்தை அடக்க முடியாது. கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக அரசு முடக்கவும் கூடாது. கருத்துச் சுதந்திரத்தை பாதுக்காப்பது அரசின் கடமை என்றும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகளே கூறுகின்றன.

ஒரு சிறந்த எழுத்தாளர் படைப்பாக்கத் திறனை முடக்கிக்கொள்ளும் விதமாக முடிவெடுத்து இனி எழுதப் போவதில்லை எனவும் தனது புத்தகங்களை திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார். இத்தகைய அவமானகரமான சூழ்நிலைக்காக நாம் மிகவும் வருந்துகிறோம். மிரட்டல் படைகளின் தலையீட்டால் படைப்புச் செயல்பாடுகளுக்குத் தடைவிதித்துள்ளதன்மூலம் இலக்கியமும் சமூகமும் எவ்வளவு பின்தங்கியுள்ளது என்பதையே காட்டுகிறது. எழுத்தாளரின் படைப்புச் சுதந்திரத்தை நிலைநிறுத்தும்விதமாக அழுத்தம்கொடுக்கப்படும் நெருக்கடிகளை புறந்தள்ளுமாறு பெருமாள் முருகனின் பதிப்பாளரான காலச்சுவடை இவ்விழா கேட்டுக்கொள்கிறது.

எழுத்தாளர்களும் வாசகர்களுமான நாம் தமிழ்இலக்கிய சமுதாயமாக இங்கு இதயப்பூர்வமாக அணிதிரண்டுள்ளோம். எந்தவித சட்டவிதிகளிலோ அல்லது அறநெறியிலோ எழுத்தாளரை முடக்கும் இந்த ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்பதை இங்கு வலியுறுத்திக் கூறுகிறோம். மேலும் அரசாங்கம் இதில் தலையிட்டு எழுத்தாளருக்கு எதிராக விடுக்கப்படும் மிரட்டல்களின்மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர் உள்ளூரில் அமைதியாக வாழவும் தொடர்ந்து இலக்கியப் பணியை ஆற்றவும் உகந்த சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் எனவும் அரசை கேட்டுக் கொள்கிறோம். நமக்கெல்லாம் வேதனையளிக்கும் ஒரு அத்தியாயமாக முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சனையாக இது இருக்கிறது. கருத்துச் சுதந்திரத்திரத்தைப் பாதுகாக்கவும் அடிப்படை உரிமைகளை செயல்படுத்தவும் வளர்ந்துவரும் சகிப்புத்தன்மையற்றப் போக்கையும், மிரட்டலையும் தணிக்கை செய்வதையும் கட்டுப்படுத்த இந்த தீர்மானங்களின் வாயிலாக மாநில, மத்திய அதிகாரிகளையும், அரசியல் கட்சிகளை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு தி லிட் ஃபார் லைஃப் 2015 இலக்கியவிழாவில் எழுத்தாளர்பெருமாள் முருகனுக்கு ஆதரவாக தீர்மானங்கள் இயற்றப்பட்டன.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x