

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வரும் 31-ம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் கொள்முதலை நிறுத்தும் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு பெட்ரோலிய முகவர்கள் சங்கம் கூறியுள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் முரளி சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருட்களின் விலைக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதன் அடிப்படையில் பெட்ரோல் விலை கடந்த அக்டோபர் மாதம் முதல் ஜனவரி 16 வரை ரூ.16.25 பைசாவும், டீசல் விலை ரூ.11.40 பைசாவும் குறைந்துள்ளன.
பொதுவாக எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 15, 30 ஆகிய தேதிகளில்தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்வார்கள். ஆனால் இம்மாதம் எதிர்மறையாக 16-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டது. இதனால் அன்றைய ஒரு நாள் மட்டும் பெட்ரோல் பங்க் முகவர்களுக்கு இருப்பு சரக்கு மதிப்பில் (inventory loss) ரூ.3 லட்சம் முதல் 5 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டது.
மத்திய அரசு பெட்ரோலிய நிறுவனங்களுக்கு இருப்பு சரக்கில் இழப்பு ஏற்பட்டால் மறுமுதலீடு தொகை வழங்குகிறது. அதேபோல் பெட்ரோல் பங்க்களுக்கும் எண்ணெய் நிறுவனங்கள் இருப்பு சரக்கு மதிப்புக்கான மறுமுதலீடு தொகையை வழங்க வேண்டும். இதுபோன்ற மாற்றங்களை பெட்ரோலிய நிறுவனங்கள் கொண்டுவர வேண்டும்.
மேலும் பெட்ரோல் பங்க்களில் உள்ள கழிப்பறைகள் சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம், டீலர் கமிஷனில் 45% பிடித்தம், 7 நாட்களுக்கு விற்பனை நிறுத்தம் ஆகிய கடுமையான சட்டங்கள் போடப்பட்டுள்ளன. இதனை பெட்ரோலிய அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 31-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொள்முதல் நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பெட்ரோல் பங்க்களில் சரக்குகள் கொள்முதல் செய்யமாட்டோம். இதனால் மத்திய - மாநில அரசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பு ஏற்படும்.
எனினும், எப்போதும்போல் பொதுமக்களுக்கு அன்றைய தினம் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும் என்றார் அவர்.