Published : 22 Jan 2015 10:00 AM
Last Updated : 22 Jan 2015 10:00 AM

பூந்தமல்லி ஏரியில் குப்பைகளை எரிக்கும் விவகாரம்: நகராட்சி ஆணையர், பொறியாளருக்கு நோட்டீஸ் - நேரில் ஆஜராக பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

பூந்தமல்லி ஏரியில் குப்பைகளை எரிக்கும் விவகாரம் தொடர்பாக பூந்தமல்லி நகராட்சி ஆணையர், பொறியாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வு உத்தரவிட்டது.

மாதவரத்தைச் சேர்ந்தவர் சி. சுரேஷ். இவர், 2012-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். அந்த மனு, 2013-ல் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வுக்கு மாற்றப்பட்டது.

அந்த மனு விவரம்: பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம், அதன் எல்லையில் உள்ள பூந்தமல்லி ஏரியில் குப்பைகளை கொட்டி வருகிறது. இதனால், ஏரி நீர் மற்றும் நிலத்தடி நீர் மாசடைகிறது. மேலும், குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள், காகிதங்கள் உள்ளிட்ட குப்பைகள், 2008-ம் ஆண்டிலிருந்து அங்கேயே எரிக்கப்படுகின்றன. இதனால், அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டமாக இருப்பதுடன், காற்றில் சாம்பல் பறந்தவாறு உள்ளது. எனவே, பூந்தமல்லி ஏரியில் குப்பைகளைக் கொட்டுவதையும், எரிப்பதையும் தடுத்து, ஏரியைப் பாதுகாக்க வேண்டும் என்று மனுவில் சுரேஷ் கோரியிருந்தார்.

இந்த மனு மீது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, ‘பூந்தமல்லி ஏரி பகுதியில் குறிப்பிட்ட இடத்தை அளவிட்டு, அங்கு மட்டும் குப்பைகளை கொட்ட வேண்டும், வேறு எங்கும் கொட்டக் கூடாது’ என்று பூந்தமல்லி நகராட்சி நிர்வாகத்துக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், அமர்வின் நீதித் துறை உறுப்பினர்கள் நீதிபதி எம். சொக்கலிங்கம், தொழில்நுட்ப உறுப்பினர் பேராசிரியர் ஆர். நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் மனு தொடர்பாக நேற்று விசாரணை நடைபெற்றது.

அப்போது, ‘பூந்தமல்லி ஏரி பகுதியில் குப்பைகள் தொடர்ந்து எரிக்கப்படுகிறது. குப்பைகளை எரிப்பது சட்டப்படி குற்றம். அதற்கான புகைப்பட ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எனவே, அங்கு குப்பைகளை எரிக்க தடை விதிக்க வேண்டும்’ என்று மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து, ‘பூந்தமல்லி ஏரியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பாக பூந்தமல்லி நகராட்சி ஆணையர், பொறியாளர் ஆகியோர் இன்று (22-ம் தேதி) பசுமைத் தீர்ப்பாயத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து விசாரணை இன்றும் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x