Last Updated : 04 Apr, 2014 11:16 AM

 

Published : 04 Apr 2014 11:16 AM
Last Updated : 04 Apr 2014 11:16 AM

அதிமுக-வின் ‘அம்மா வாய்ஸ்’ சேவைக்கு ஒரே நாளில் 1 லட்சம் தொலைபேசி அழைப்புகள்

தேர்தலை முன்னிட்டு அதிமுக-வால் தொடங்கப்பட்டுள்ள ‘அம்மா வாய்ஸ்’ சேவையை ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளனர்.

சமூகவலைத்தளங்கள் மூலம் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இணையதள உபயோகிப்பாளர்களை கவர்ந்திழுக்க பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்காளர்களை கவர புதுப்புது சேவைகளை தங்கள் இணையதளத்தில் அவை அறிமுகம் செய்து வருகின்றன.

இந்தவரிசையில், அதிமுக-வும் வரிந்து கட்டிக் கொண்டு பல விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருவதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்

இதுபற்றி அதிமுக வட்டாரங்கள் கூறியதாவது:

திராவிடக் கட்சிகளிலேயே முதல்முறை யாக, ஆன்லைனில் (aiadmk.com) கட்சி உறுப்பினர்களை சேர்க்கும் திட்டத்தை அதிமுக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இதில், குறுகிய காலத்திலேயே 40 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். அவர்கள் நேரில் வராமலேயே, இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து, உறுப்பினர் அட்டையை ‘பிரின்ட்’ எடுத்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக, கட்சி உறுப்பினராக சேர, குறைந்தது 20 பேரையாவது குழுவாகச் சேர்த்துக் கொண்டு உள்ளூர் கட்சித் தலைவர்களிடம் கையெழுத்து வாங்கி மனு செய்யவேண்டும். உறுப்பினர் அட்டையை பெற ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருக்கவேண்டும். ஆனால், இதில் உடனே பெறமுடியும் என்பதால் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

வாட்ஸ் ஆப்-ல் 10 லட்சம் பேர்

இளைஞர்களிடம் பெரிதும் வரவேற்பு பெற்றுள்ள ‘வாட்ஸ் ஆப்’ செயலியில் முதல்வரின் சாதனைகள் அடங்கிய வீடி யோக்களைப் பெறும் சேவை, கட்சியின் இணையதளத்தில் அறிமுகப்படுத் தப்பட்டது. இது அறிமுகப்படுத்தப் பட்ட சில மாதங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாகியுள்ளனர். அவர்களுக்கு அதிமுக பற்றிய தகவல்கள் தினசரி அனுப்பப்பட்டுவருகின்றன.

இதுதவிர, டயல் செய்தால் (9543778899) முதல்வரின் பேச்சுக்களை கேட்கலாம் (அம்மா வாய்ஸ்) என்ற சேவை, புதன்கிழமை அறிமுகப்பட்டுள்ளது. அந்த வசதியைப் பயன்படுத்தி ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர், முதல்வரின் பேச்சுக்களை கேட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x