

சென்னை புத்தகக் காட்சியில் இதுவரை ரூ.12 கோடிக்கும் மேல் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க செயலர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ஜனவரி 9ல் தொடங்கப்பட்ட 38-வது சென்னை புத்தகக் காட்சி 21-ம் தேதி புதன்கிழமையோடு நிறைவடைகிறது. இந்நிலையில், புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க செயலர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
''புத்தகக் காட்சி துவங்கிய 12 நாட்களில் 8 லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளனர். இதுவரை ரூ.12 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு புத்தகக் காட்சியை எங்கு நடத்துவது என்று தீவிர ஆலோசனை நடத்தி வருகிறோம். புத்தகக் காட்சிக்கு சிறப்பு இடம் தருமாறு தமிழக அரசிடம் வலியுறுத்துவோம்.
புத்தக விற்பனையில் 25 ஆண்டு நிறைவு செய்தோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படும்'' என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.