Published : 30 Jan 2015 03:12 PM
Last Updated : 30 Jan 2015 03:12 PM

ஆசிரியை படத்தை சமூக இணையதளத்தில் வெளியிட்ட அதிமுக கவுன்சிலர் மீது வழக்கு

சேலத்தில் தனியார் பள்ளி ஆசிரியையை அலைபேசியில் ஆபாசமாக வீடியோ எடுத்து சமூக இணையதளத்தில் வெளியிட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவின் படி, சேலம் மாநகராட்சி 30வது கோட்ட அதிமுக மாமன்ற உறுப்பினர் உள்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை கடந்த சில ஆண்டுக்கு முன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது, அங்கு தனது சேலையை மாற்றிய காட்சியை தேவி என்பவர் ரகசியமாக வீடியோ எடுத்தார். இந்த வீடியோ காட்சிகளை அந்த பகுதி மாமன்ற உறுப்பினரான அதிமுக கவுன்சிலர் ஆதிமாதவன் என்பவரிடம் தேவி காண்பித்துள்ளார். இதனை பார்த்த மாமன்ற உறுப்பினர், ஆசிரியையும், அவரது கணவரையும் அழைத்து வீடியோயை காண்பித்து, இந்த வீடியோ பதிவை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க, ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். மேலும், பள்ளி ஆசிரியையை, தான் அழைக்கும் போது வர வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

இது குறித்து சேலம் செவ்வாய் பேட்டை காவல்நிலையத்தில் ஆசிரியை புகார் அளித்தார். காவல்துறையினர், இந்த சம்பவத்தில் இரண்டு கல்லூரி மாணவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் மனு அளித்த பள்ளி ஆசிரியை, தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், சம்பந்தமே இல்லாதவர்களை கைது செய்து இருப்பதாகவும், தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். மனுவை விசாரித்த சேலம் மகளிர் நீதிமன்றம் இது குறித்து உரிய விசாரணை நடத்தவும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவும் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சேலம் செவ்வாய்ப்பேட்டை காவல்நிலையத்தில் ஒரு ஆண்டுக்கு பிறகு, ஆசிரியையை ஆபாசமாக படம் எடுத்த தேவி என்ற பெண் மீதும், அந்த வீடியோவை வைத்து மிரட்டி இணையதளத்தில் பரப்பிய அதிமுக மாமன்ற உறுப்பினர் ஆதிமாதவன் மீதும் மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இருவர் தலைமறைவாக உள்ளனர் .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x