Published : 03 Jan 2015 10:07 AM
Last Updated : 03 Jan 2015 10:07 AM

உயர் நீதிமன்ற நீதிபதி பால் வசந்தகுமார் ஜம்மு-காஷ்மீர் தலைமை நீதிபதியாகிறார்

சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி என்.பால் வசந்தகுமார் (59) விரைவில் ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வரும் பால் வசந்தகுமார், 1955-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி கன்னியாகுமரியில் பிறந்தார். எம்.ஏ., எம்.எல். பட்டம் பெற்று, 1980-ம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்தார். மூத்த வழக்கறிஞர் மறைந்த டி.மார்டினிடம் ஜூனியராகச் சேர்ந்து, கல்வி மற்றும் தொழிலாளர் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவராக திகழ்ந்தார். மத்திய அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றி யுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக 10-12-2005 அன்று நியமிக்கப்பட்டார். 20-4-2007 அன்று சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியானார். விரைவில் இவர் ஜம்மு-காஷ்மீர் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்தவரும், தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதியுமான எப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா ஏற்கனவே ஜம்மு- காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக 2011-2012-ம் ஆண்டுகளில் 14 மாதங்கள் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பால் வசந்தகுமார் ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்றால், ஜார்கண்ட் உயர்நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படக்கூடும். அவ்வாறு நியமிக்கப்பட்டால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை தற்போது இருப்பதுபோலவே 43 ஆகவும், காலியிடம் 17 ஆகவும் நீடிக்கும்.

தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் எப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா, சி.நாகப்பன், ஆர்.பானுமதி ஆகியோர் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக உள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த மற்ற நீதிபதிகளான எம்.ஜெயபால், கே.கண்ணன் ஆகியோர் பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றத்திலும், நீதிபதி ராஜ இளங்கோ ஆந்திர உயர் நீதிமன்றத்திலும் பணியாற்று கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x