

மத்திய கைலாஷ் பகுதியில் ரூ.35 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இப்பகுதியில் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதிக்கப்படாதவாறு சாலையை விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் சைதை துரைசாமி கூறினார்.
மத்திய கைலாஷ் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் மேம்பாலம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (சிஎல்ஆர்ஐ) அருகே தொடங்கி, வலதுபுறம் ராஜீவ்காந்தி சாலையில் திரும்பி வி.எச்.எஸ். மருத்துவமனை வரை 500 மீட்டர் தூரத்துக்கு ரூ.35 கோடி செலவில் இப்பாலம் அமைக்கப்படுகிறது. இதற்கு 5-க்கும் மேற்பட்ட வடிவங்கள் பெறப்பட்டன. அதில் மாநகராட்சி அதிகாரிகள் இறுதி செய்துள்ள வடிவம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு பதில் அளித்தனர்.
மத்திய கைலாஷ் பகுதியில் 30 ஆண்டுகளாக வேலை பார்த்த நீதிமன்னன் என்பவர் கூறும்போது, ‘‘இங்கு அடிக்கடி விபத்து நடக்கிறது. சாலையை விரிவுபடுத்தினால் மட்டுமே நெரிசலைக் குறைக்க முடியும். சாலை விரிவாக்கம் செய்யாவிட்டால் அது பாதசாரிகளுக்கு மிகவும் ஆபத்தாக அமையும்’’ என்றார்.
வாகன ஓட்டிகள் சார்பாக பேசிய சி.ஆர்.ஆதித்யா என்பவர் கூறும்போது, ‘‘வரவிருக்கும் மேம்பாலம் மத்திய கைலாஷ் சந்திப்பில் மட்டுமே போக்குவரத்தை குறைக்கும். சாலை குறுகிவிடுவதால் கிண்டியில் இருந்து அடையாறு செல்பவர்களுக்கு திண்டாட்டமாகிவிடும். நடைபாதை அகலம் 1.5 மீட்டர் இருக்கவேண்டும் என்பது விதிமுறை. இங்கு ஏற்கெனவே அந்த அளவுக்கு இல்லை. பாலமும் கட்டிவிட்டால் நடைபாதை அகலம் மேலும் குறைந்து விடும்’’ என்றார்.
நிலம் கையகப்படுத்தும் அவசியம் எதுவும் இல்லை என்பதால், பாலம் அமைப்பதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்தனர். ஆனால், பாதசாரிகள் நலனைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தவேண்டும் என்று வலியுறுத்தினர். கோட்டூர்புரம் கால்வாய்க் கரை சாலை வழியாக டைடல் பார்க் நோக்கிச் செல்பவர்களுக்கு நேரடி பாதை இருக்குமா என்றும் பலர் கேள்வி எழுப்பினர்.
பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து மேயர் சைதை துரைசாமி கூறும்போது,
‘‘மேம்பாலம் கட்டுவதோடு, சாலையை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். சர்தார் பட்டேல் சாலையில் நெடுஞ்சாலை ஆய்வு நிறுவனம் முதல் மத்திய தோல் ஆய்வு நிறுவனம் வரை சாலை விரிவாக்கத்துக்கு நிலம் வேண்டி கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. பாதசாரிகள், வாகன ஓட்டிகளின் நலன் பாதிக்கப்படாது. டைடல் பார்க் செல்ல நேரடி பாதை இருக்கும்’’ என்றார்.
மேம்பாலத்தின் கட்டுமானத் திட்ட வரைபடம் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. மேம்பாலத் துறை அதிகாரிகள் கணேசன், சுதாகர், குடியிருப்போர் நலச் சங்கங்களை சேர்ந்தோர், பொறியியல் மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.