Published : 02 Apr 2014 05:47 PM
Last Updated : 02 Apr 2014 05:47 PM

நள்ளிரவிலும் வீடு வீடாக பிரச்சாரம் செய்யலாம்: தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் விளக்கம்

இரவு 10 மணிக்குமேல் ஒலிபெருக்கி பயன்படுத்திதான் பிரச்சாரம் செய்யக் கூடாது. ஆனால், நள்ளிரவிலும் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் நடிகர் அர்ஜுன் பங்கு பெற்றுள்ள நேர்மையான தேர்தலை வலியுறுத்தும் விழிப்புணர்வு சி.டி.யை புதன்கிழமை பிரவீண்குமார் வெளியிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் இதுவரை 1.07 லட்சம் புகார்கள் பெறப் பட்டுள்ளன. இவற்றில் 778 புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. வாகனச் சோதனை களில் இதுவரை ரூ.14.59 கோடி ரொக்கம் உள்பட ரூ. 21.35 கோடி பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 200 மதுபாட்டில்களும் இதில் அடங்கும்.

தேர்தல் பிரச்சாரத்தைப் பொருத்தவரை, ஒலிபெருக்கி மூலம் இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது. ஆனால், வீடு வீடாகப் பிரச்சாரம் செய்வோர் நள்ளிரவிலும் செய்யலாம். அதற்குத் தடை இல்லை. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் மாற்றுத் திறனாளிகள், அலுவலகத்துக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், தேர்தல் அதிகாரி வெளியில் வந்து மனுவைப் பெறலாம்.

நாமக்கல்லில் ஒரு அமைச்சருக்கு ஆதரவாக செய்தி வெளியானது பற்றி எதிர்க்கட்சியினர் புகார் செய்தனர். அதுபற்றி செவ்வாய்க்கிழமை விவாதிக்கப்பட்டது. விளக்கம் கேட்டு அந்த நாளிதழுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரம் மேற் கொள்ளும் அரசியல் கட்சியினர் சாலையை முழுவதுமாய் அடைத்த படி செல்லக்கூடாது. சாலையின் ஒருபுறத்தில் மட்டும் பிரச்சாரம் செய்ய வேண்டும். இதை மீறி, போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பிரச்சாரம் செய்யும் கட்சிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

நகைக்கடை, அடகுக்கடை

தேர்தலின்போது பண விநியோகத்தைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகைக்கடைகள், அடகுக்கடைகளிலும் கண்காணிக் கப்படுகிறது. வீடுகளுக்கு பால் சப்ளை செய்பவர்கள் மூலம் பணம் தரப்படுவதாக சிலர் கூறுகின்றனர். அதற்காகத்தான் வாக்காளர்கள் யாரும் பணம் வாங்கக்கூடாது என்று தீவிர பிரச்சாரம் செய்து வருகிறோம். ஒவ்வொரு தெருவுக்கும் பாதுகாப்பு போட முடியாது. பொதுமக்கள் குறிப்பாக, இளைஞர்கள் உடனுக்குடன் இதுபற்றி தகவல் தெரிவிக்க வேண்டும். தேர்தலின்போது பணம் கொடுப்பதைத் தடுக்க தொடர்ந்து போராட வேண்டியிருக்கும்.

பணம் வாங்கக்கூடாது என்ற விழிப்புணர்வு விளம்பரத் தில் அமெரிக்க டாலர் இடம் பெற்றுள்ளது. இந்திய ரூபாயை அவமதிக்கக்கூடாது என்ற நோக்கில் அதை தவிர்த்துள்ளோம். ராமநாதபுரத்தில் வாக்காளர் களுக்கு பணம் தரப்பட்டது தொடர்பாக அதிமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. மாற்றுத் திறனாளி வாக்காளர்களை வாக்குச்சாவடி நுழைவாயில் வரை வாகனத்தில் கொண்டுவந்து விடலாம்.

ஐ.டி. நிறுவனங்களுக்கு விடுமுறை

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடக்கும் ஏப்ரல் 24-ம் தேதி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்காத ஐ.டி. நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்படும்

இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x